தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையினை இலங்கையில் அங்கீகரித்த ஒரேயொரு கட்சி ஐக்கிய சோஷலிச கட்சியென ஐக்கிய சோஷலிச கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சிறிதுங்க ஜெயசூரிய தெரிவித்தார்.
நேற்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து தற்போதைய ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார். மனுஷ நாணயக்கார போன்றவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.
மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு தற்போது தீர்ப்பு வந்துள்ள நிலையில் ஜனாதிபதியின் செயற்பாடு மிகவும் அருவருக்கத் தக்கதாக இருக்கின்றது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வந்தாலும் அவர் ஒரு நீதிமன்றத்தை அவமதித்து மனித உரிமை ஆணைக்குழுவால் நிராகரிக்கப்பட்ட ஒருவராகவே தான் பார்க்கப்படுகின்றது.
தற்போது பிரதானமான கட்சிகள் வறுமை என்று சொல்லிக்கொண்டு மில்லியன் கணக்கில் பணங்களை செலவு செய்கின்றார்கள். இந்தப் பணங்கள் எங்கிருந்து வருகின்றது. இன்றைய நிலையில் நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கின்ற போது இவர்கள் செலவழிக்கும் பணமானது எங்கிருந்து வருகின்றது? மக்கள் இவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும், எங்களுக்கு இந்த பணத்தினை செலவு செய்ய வேண்டாம், இதை நாட்டின் நலனுக்காக பாவியுங்கள் அல்லது ஒரு பூசை செய்யுங்கள்.
நேற்றுமுன்(24) தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதிற்கு ஆதரவாக நடந்த கூட்டமானது பலராலும் பேசப்படுகின்றது. நேற்றுமுன்தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ரணிலின் கூட்டத்தில் 100ரூபா காசும், பிரியாணி சாப்பாடும், களவாக 1/4 போத்தல் சாராயமும் வழங்கியுள்ளனர்.
தற்போது ரணிலின் கூட்டங்களில் பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்களும், அலிசப்றி, ரகீம் போன்ற தங்கம் கடத்தியவர்களே இன்று ரணிலுடன் நிற்கின்றார்கள்.
வடகிழக்கு மக்களை ஏமாற்றுவதற்காக பல பொய்களை கூறுகின்றார்கள் 13ஆம் திருத்தத்தை தருகிறோம் என்று இருக்கிறார்கள். 13ஆம் திருத்தம் பிரச்சனைகள் ஆனால் எதுவுமே நடக்கப் போவதில்லை. தேர்தலை மூலகனமாக வைத்துக் கொண்டு பல பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.
வடக்கு கிழக்கு வெல்ல, மக்கள் கடந்த காலங்களில் கற்றுக் கொண்ட பாடங்களை மனதில் வைத்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும்.
தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட ஜேவிபி கட்சியினர் எவ்வாறு தமிழர்கள் மத்தியில் வாக்கு கேட்டு வருவது?
தற்போது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக செயற்படும் ஒரு கட்சி எமது ஐக்கிய சோசலிச சட்சி மாத்திரமே. தழிழ் மக்கள் கோரும் நியாயமான கோரிக்கையை தீர்க்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
ரணில் எதிர்வரும் தை மாதம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக கூறுகின்றார், அப்படியானால் அவரால் ஏன் அதை இப்போது செய்ய முடியவில்லை, அப்படியானால் அதை நாம் ஏமாற்று வித்தையாகவே பார்க்க வேண்டும்.
ஜேவிப்பியினர் தற்போது கூறுகின்றனர் ஒவ்வொரு 3 கிலோ மீற்றருக்கும் ஒரு தேசிய பாடசாலை என்று, இதெல்லாம் எந்தளவிற்கு சாத்தியம், அப்படியானால் அனைவரும் எமது மக்களை ஏமாற்றவே பார்க்கின்றனர்.
பாரம்பரிய தமிழ் முஸ்லிம் கட்சி தலைவர்கள் தமது கோரிக்கையை முன்வைத்துத்து, தமது நலனுக்காகவே ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கின்றனரே ஒழிய தமிழ் மக்களின் நலனுக்காக அல்ல என்றார்.