ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கூறுவதைப் போன்று, சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை மறுசீரமைத்தால் அத்தருணமே நாடு ஆபத்தில் சிக்க நேரிடும் என நிதி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில், அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அலி சப்ரி மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் கூட்டாக ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க,
”எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கூறுவதைப் போன்று, சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை மறுசீரமைத்தால் அத்தருணமே நாடு ஆபத்தில் சிக்க நேரிடும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தோ்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் அதல பாதாளத்தில் வீழ்ந்திருந்த நாட்டை மீட்டு, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய நாடாக மாற்றியவர் ரணில் விக்ரமசிங்க.
வேறு யாரும் சவாலை ஏற்க விரும்பவில்லை. அந்த சவாலை ஏற்கும் திறன் அவர்களிடம் இருக்கவும் இல்லை.
இந்த நேரத்தில், நாட்டின் மிக முக்கியமான விடயம் பொருளாதாரம் ஆகும். பல தரப்பினரும் பொருளாதாரம் தொடர்பான பல்வேறு முன்மொழிவுகளை முன்வைத்தாலும், அந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தும் இயலுமை பற்றிய புரிதல் இல்லை என்றே தோன்றுகிறது.
நாம் தோல்வியடைவோம் என்று நினைத்து சிரித்தவர்களும், நமது வேலைத் திட்டம் சீர்குலையும் என்று எண்ணியவர்களும் இன்று மக்கள் முன்வந்து வாக்குறுதிகளை அளிப்பது வேடிக்கையாக உள்ளது” என்றார்.