மோசடியான வர்த்தகர்களின் பொறிக்குள் சிக்கிக் கொள்ளாமல் விவசாயிகளை வளப்படுத்துவதற்காக 50 கிலோ கிராம் உர மூடையை 5000 ரூபாவிற்கு வழங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (30) அநுராதபுரம் – மதவச்சிய நகரில் இடம்பெற்ற பேரிணயின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது,
“கொரோனா அச்சுறுத்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், நாட்டின் வங்குரோத்து தன்மை, நானோ உர மோசடி என்பவற்றின் காரணமாக விவசாயிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மோசடியான வர்த்தகர்களின் பொறிக்குள் சிக்கிக் கொள்ளாமல் அவர்களை வளப்படுத்துவதற்காக 50 கிலோ கிராம் உர மூடையை 5000 ரூபாவிற்கும், கிருமி நாசினிகளையும், கலைக் கொல்லிகளையும் நியாயமான விலைக்கு வழங்குவோம்.
QR CODE முறையில் மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும், முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும், பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சாரதிகளுக்கும், சக்தி திட்ட அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருள்களை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம்.
விவசாயிகளின் உற்பத்திகளுக்கும், நெல்லுக்கும் நிர்ணய விலை ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, நுகர்வோரையும் விவசாயிகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.