நேற்று முன்தினம் (30) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் விடுதி இலக்கம் 34 இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டரின் மனைவியிடம் அவ் விடுதியில் கடமையாற்றிய தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தகாத வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்தும், முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் இக்குற்றச்சாட்டின் ஒரு பகுதி காணொளியாக முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்டிருந்தததுடன், சிலர் இதற்கு உரியவர்களை தண்டிக்கக்கோரியும், சிலர் இது போய்யென்றும், போலி செய்திகளை பரப்பவேண்டாம் என்றும் பல முகப்புத்தக பதிவுகள் நேற்று வலம்வந்திருந்ததை காணக்கூடியவாறு இருந்தது.
இதனை ஒளிப்பதிவு செய்தவர், தாதிய உத்தியோகத்தர் மது போதையில் இருந்ததாகவும், தகாத வார்த்தைகளை பாவித்து மிலேச்சத் தனமாக நடந்து கொண்டதாகவும் மேலும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்ததுடன். இவ்விடுதி வைத்தியர் முருகமூர்த்தியின் கண்காணிப்பின் கீழ் உள்ள விடுதி. அவருக்கு இதனை தெரியப்படுத்துமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் நோயாளி தெரிவித்ததாவது,
நான் அடிக்கடி வைத்தியசாலைக்கு வந்து போகும் ஒருவன். அத்துடன் நான் 16 நாட்களாக வைத்தியசாலையில் முடியாத நிலையில் தங்கியுள்ளேன். என்னை கவனித்துக்கொள்வதற்கு யாரும் இல்லை. இந்தநிலையில் எனது மனைவிதான் என்னை பார்த்துக்கொள்கிறார்.
ஆனால் நேற்று முன்தினம் நடந்த சம்பவமானது, எனது மனைவியிடம் வைத்தியர்தான் சொன்னார். அருகிலேயே இருந்து பார்த்துக்கொள்ளுங்கள் என்று சற்று நேரத்தில் அங்கு வந்த கண்காணி முறையற்றவிதத்தில் பேசினார். இங்கு நீங்கள் இருக்கமுடியாது. வேண்டும் என்றால் பெண்கள் விடுதியில் போய் தங்குங்கள் என்று கோவமாக பேசினார்.
இதனால் தான் அருகில் நின்று பேசலாம் என்று சென்ற போது அவரிடம் இருந்து மதுவின் வாசனை எனக்கு வீச, உடனே நான் தொலைபேசியில் ஆதாரத்திற்காக காணொளி எடுத்தேன் என்று அவர் தனது பக்க கருத்தை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் வைத்தியர் முருகமூர்த்தியுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது குறிப்பிட்ட சம்பவம் நடந்ததது உண்மை எனவும், ஆனால் தாதிய உத்தியோகத்தர் மதுபோதையில் இருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
வைத்தியசாலை விடுதிக்குள் தொலைபேசி பாவனை மற்றும் காணொளி எடுக்க யாருக்கும் அனுமதியில்லை. ஒரு தனி நோயாளியின் ஒளிவு மறைவுகள் எங்களுக்கு மிக முக்கியம், அவை அனைவருக்கும் பகிரப்படவேண்டியது அல்ல.அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறுபவர்கள் பொலிஸில் அன்று இரவே முறையிட்டிருக்கலாம். ஏன் அவர் எனக்கு முன்னாள் காணொளி எடுத்திருந்தால் கூட நான் அவ்வாறுதான் தொலைபேசியை பறித்து எடுத்திருப்பேன்.
அதுமட்டுமல்லாது வைத்தியசாலையில் ஒவ்வொரு உத்தியோகத்தர்களும் வெவ்வேறு மனப்பாங்குடன் நடந்து கொள்கின்றமையால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றது எனவும் குறிப்பிட்ட அவர், அது ஆண்கள் விடுதி, அத்துடன் அவரது மனைவி இரவு 9 மணியை தாண்டியும் அங்கு நிற்றதால் தான் அவர் அவரை வெளியேறும் படி சற்று கோவமான மனப்பான்பில் பேசியிருக்கலாம் என்றும் அவர் தரப்பு கருத்துக்களை எங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அப்படியெனில் தாதிய உத்தியோகத்தர்கள், விடுதியில் அனுமதிக்கப்பட்டு இருபவர்களிடமோ அல்லது நோயாளர்களை பராமரிப்பவர்களிடமோ தாங்கள் விரும்பிய விதத்தில் நடந்து கொள்ளலாம் என்பதை போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஏற்றுக்கொள்கின்றதா? என்ற கேள்யே இங்கு எழுகிறது.
வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்த்துக்கொள்ள வெளியாட்கள் ஒருவரை அமர்த்துவதற்கு ஒருநாள் கூலியாக 7000 தொடக்கம் 12000 வரை காணப்படுகிறது. பணம் இருப்பவர்கள் கொடுப்பார்கள். இல்லாதவர்களின் நிலைதான் இங்கு கேள்விக்குறி.
இது தொடர்பில் போதனா வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியரும், வைத்தியசாலை அத்தியாகச்சரும் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றார்கள் என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
இவ்விடயம் தொடர்பில் நாம் தொடர்ச்சியாக கண்காணிப்போம்.