புலாவாயோ, குவீன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற பி குழுவுக்கான ஐ.சி.சி. உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஓமானை 10 விக்கெட்களால் மிக இலகுவாக இலங்கை வெற்றிகொண்டது.
தகுதிகாண் சுற்றில் சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க டி சில்வா 2ஆவது தொடர்ச்சியான தடவையாக பதிவு செய்த 5 விக்கெட் குவியல், லஹிரு குமார் கைப்பற்றிய 3 விக்கெட்கள் என்பன இலங்கையின் வெற்றியை சுலபப்படுத்தின.தனது முதலிரண்டு போட்டிகளில் அயர்லாந்தையும் ஐக்கிய அரபு இராச்சியத்தையும் வெற்றிகொண்ட ஓமானுக்கு, இலங்கையுடனான போட்டியில் படு தோல்வி அடைந்ததால் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.
அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஓமான், இலங்கை பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு 30.2 ஓவர்களில் 98 ஓட்டங்களுக்கு சுருண்டது.
முதல் போட்டியில் போன்றே இப்போட்டியிலும் துல்லியமாக பந்து வீசிய வனிந்து ஹசரங்க 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 7.2 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை கைப்பற்றினார்.
லஹிரு குமார 2 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 8 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஓமான் துடுப்பாட்டத்தில் அயான் கான் (41), ஜடிந்தர் சிங் (21), பயாஸ் பட் (13 ஆ.இ.) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
99 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை, 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி, ஆட்டத்தை வேளையோடு முடிவுக்கு கொண்டுவந்தது.
திமுத் கருணாரட்ன 51 பந்துகளில் 8 பவுண்டறிகள் அடங்கலாக 61 ஓட்டங்களுடனும் பெத்தும் நிஸ்ஸன்க 5 பவுண்டறிகள் உட்பட 37 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
திமுத் கருணாரட்ன கடந்த 4 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக அரைச் சதங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.