♦ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி / என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்.
♦எழுத்தாளர், ஆய்வாளர் Mlm Mansoor அவர்கள் எழுதியிருக்கும் அருமையான அரசியல் பகுப்பாய்வுக் கட்டுரையை நன்றியுடன் பகிர்கிறேன்.
சிங்கள பெரும்போக்கு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்யும் அரசியல் விமர்சகர்கள் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு சொல் ‘தீரணாத்மக’ என்பது (தமிழில் அதனை ‘இரண்டில் ஒன்று முடிவாகப் போகும் தருணம்’ என்று சொல்லலாம்).இன்று இலங்கை அதன் சுதந்திரத்திற்கு பிற்பட்ட 76 வருட கால வரலாற்றில் மிக மிக நிர்ணயமான ஒரு கட்டத்தில் வந்து நின்றிருக்கிறது என்ற அபிப்பிராயம் பொதுவாக அனைத்துத் தரப்புக்கள் மத்தியிலும் நிலவி வருகிறது.
முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது இந்தத் தேர்தல் முற்றிலும் வேறுபட்ட ஓர் இயல்பை கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகிறது.
ஜனாதிபதி தேர்தல்களில் இதுவரையில் இருந்து வந்த இரு முனைப் போட்டி இந்தத் தடவை ஒரு நான்கு முனைப் போட்டியாக மாற்றமடைந்திருப்பது முதலாவது விசேஷம்.
பலர் நாமல் ராஜபக்சவின் பெயரை தவிர்த்து ‘இது ஒரு மும்முனைப் போட்டி’ என்று சொல்லி வந்தாலும் கூட, நாமலும் ஒரு குறிப்பிடத்தக்க போட்டியாளராக இருந்து வருகிறார் என்பதில் சந்தேகமில்லை.
தேர்தல்களில் இதுவரையில் 5% க்கு குறைவான வாக்குகளை மட்டுமே பெற்று வந்த ஒரு விளிம்பு நிலைக் கட்சி ஒரு முதன்மை போட்டியாளராக எழுச்சியடைந்திருப்பது இரண்டாவது சிறப்பம்சம்.
1990 கள் தொடக்கம் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களின் போது சிங்கள சமூகத்தின் கொடிய எதிரிகளாக கட்டமைக்கப்பட்டு வந்த தமிழ் பிரிவினைவாதம், டயஸ்போரா சமூகம் மற்றும் 2019 இல் முன்வைக்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதம் போன்ற கோஷங்கள் பிரச்சார மேடைகளிலிருந்து தலைமறைவாகியிருப்பது. அடுத்த விசேஷம். அதாவது, கடந்த 20 ஆண்டுகளில் வெளிப்படையாக இனவாதம் பேசப்படாமல் நடத்தப்படும் முதலாவது தேர்தல் இது.
சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் (Sinhala Heartland) தெளிவாகவே ஒரு ஜேவிபி / என்பிபி ஆதரவு அலை நிலவி வருவதை அவதானிக்க முடிகிறது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வெவ்வேறு தரப்புக்களால் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் மீண்டும் மீண்டும் இதனை ஊர்ஜிதம் செய்திருக்கின்றன.
அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அணி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் அரசியல் ஆய்வாளர்களும் கூட ‘ஆம் அவர்களுக்கு ஒரு ஆதரவு அலை இருந்து வருகிறது; அதை மறுக்க முடியாது’ என்ற பீடிகையுடனேயே தமது கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.
அதே வேளையில், சஜித் மற்றும் ரணில் ஆகியோர் இந்தத் தடவை முன்வைத்திருக்கும் பிரச்சார சுலோகங்கள் பெரிதாக வாக்காளர்களை கவரக்கூடியவையாக இருந்து வரவில்லை. சார்புரீதியில், ஜேவிபி / என்பிபி அணிக்குக் கிடைத்திருக்கும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அனுகூலம் – ‘எதிரி யார்’ என்பதை தெளிவாக அடையாளம் காட்டக் கூடிய ஆற்றல்.
சஜித் அணியை பொறுத்தவரையில் அவர்கள் ‘வீழ்த்த விரும்பும் முதன்மை எதிரி’ யார் என்பது அவர்களுக்கே தெளிவில்லாமல் இருப்பது முக்கியமான ஒரு பலவீனம். ராஜபக்சகளின் அரவணைப்பில் இருந்த பலரை தனது அணிக்குள் உள்ளீர்த்துக் கொண்ட பின்னர் ‘திருடர்களை களை எடுப்போம்’ போன்ற ஜனரஞ்சக சுலோகங்களை முன்வைக்கும் தார்மீக உரிமையை இழந்திருக்கிறார் சஜித்.
அவருடைய மற்றொரு பலவீனம் இன்றைய இலங்கையின் பொருளாதார யதார்த்தங்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத விதத்தில் கோமாளித்தனமான வாக்குறுதிகளை வழங்குவது. சொல்லப்போனால் ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்கிரமரத்ன போன்ற நாட்டு நடப்புக்களை நன்கு அறிந்து வைத்திருக்கும் SJB முக்கியஸ்தர்களை பெரும் சங்கடத்தில் நேளிய வைக்கும் வாக்குறுதிகள் அவை.
‘அநுர குமாரவே எங்கள் தெரிவு’ என்று சொல்லும் பலர் அதற்கு முன்வைக்கும் காரணம் ‘ஒரு தடவை அவர்களுக்கும் கொடுத்துப் பார்ப்போமே’ என்பது. அதாவது, ‘இவ்வளவு காலமும் எத்தனையோ பேருக்கு வாக்களித்து ஏமாந்திருக்கிறோம். கடைசியில் இன்றைய வங்குரோத்து நிலைதான் எமக்கு எஞ்சியிருக்கின்றது’ என்ற ஆதங்கமே இந்தப் பேச்சுக்களில் தொனிக்கிறது. அதனையே அதாவது – ‘ இந்தத் தடவை திசைகாட்டிக்கு’ என்று மக்கள் சொல்வதையே – ஜேவிபி/ என்பிபி அணி தனது பிரச்சார சுலோகமாக பயன்படுத்தி வருகிறது.
குறிப்பாக, 2022 அரகலய மக்கள் எழுச்சிக்குப் பின்னர் நாட்டில் உருவாக்கியிருக்கும் ஜேவிபி/ என்பிபி ஆதரவு அலையின் குடிசனவியல் பண்புகள் (Demographic Features) எவை, புதிதாக ஜேவிபி ஆதரவாளர்களாக சேர்ந்திருக்கும் பல இலட்சக் கணக்கானவர்கள் எங்கிருந்து வந்தார்கள், இந்த முடிவை நோக்கி அவர்களைத் தள்ளிய சமூக, உளவியல் காரணிகள் எவை போன்ற கேள்விகளுக்கு விடைகளை கண்டுபிடிப்பதற்கு நாங்கள் 2004 வரைக்கும் பின்நோக்கிச் செல்ல வேண்டும்.
2004 பாராளுமன்றத் தேர்தலில் ஜாதிக ஹெல உருமய (JHU) கட்சி சார்பில் மேல் மாகாணத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 9 பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் புத்த பிக்குகள்.
விடுதலைப் புலிகளுடனான போரை சந்திரிகா – மங்கள அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து கடும் விரக்தி நிலையில் இருந்து வந்த தீவிர சிங்கள -பௌத்த உணர்வாளர்களின் ஒரு பிரிவினரே இவ்விதம் திடீர் JHU ஆதரவாளர்களாக மாறியிருந்தார்கள்.
அவர்களை அவ்விதம் அணி திரட்டுவதில் பாட்டலி சம்பிக்க ரணவக்க முதன்மையான ஒரு பாத்திரத்தை வகித்திருந்தார். கங்கொடவில சோம தேரர் உருவாக்கிய பௌத்த எழுச்சி அலையினால் தூண்டப்பட்டிருந்த ஒரு பிரிவினரின் இன உணர்வுகளை அச்சந்தர்ப்பத்தில் ரணவக்க மிகவும் சாதுர்யமாக தனக்கு சாதகமான விதத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.
இந்தச் சமூகப் பிரிவினர் மேல் மாகாணத்தில் – குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் – செறிந்து வாழ்ந்து வருகிறார்கள். 1980 களில் உருவாகிய தொழில் வாய்ப்புக்களைப் பெற்று, வெளி மாகாணங்களிலிருந்து வந்து கொழும்பு புற நகர் பகுதிகளில் குடியேறியவர்கள்.
ஜே ஆர் அறிமுகம் செய்து வைத்த திறந்த பொருளாதார கொள்கையின் மூலம் பயனடைந்த முதல் தலைமுறையினர் கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்டிருக்கும் கெஸ்பாவ, கடுவெல, கோட்டே, மகரகம, ஹோமாகம போன்ற கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த தேர்தல் தொகுதிகளில் இந்த வகுப்பினரின் பிரசன்னம் அதிகம். சிங்கள மத்திய தர வரக்கத்தின் ஒரு புதிய பிரிவினரின் எழுச்சியாக (Sociological Phenomenon) அப்பொழுது அது பார்க்கப்பட்டது.
கொழும்பு மாவட்டத்தில் கெஸ்பாவ மற்றும் மகரகம போன்ற தொகுதிகளில் வாக்குகளின் அடிப்படையில் யூஎன்பியை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டு, JHU இரண்டாவது இடத்தை பிடித்துக் கொள்ளும் அளவுக்கு அப்போதைய சிங்கள பௌத்த அலை வலுவானதாக இருந்து வந்தது.
இதேபோல கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் JHU கணிசமான அளவிலான வாக்குகளை பெற்றுக் கொண்டிருந்தது. அதன் பின்னர் இந்தப் பிரிவினர் 21 ஆம் நூற்றாண்டு சிங்கள பெருந் தேசியவாதத்தின் ‘Trendsetter’ களாக உருவாகியதுடன், அவர்கள் தூண்டிவிட்ட அந்த உணர்வு சிங்கள சமூகம் நெடுகிலும் மிக வேகமாக பரவியது.
2010, 2019 ஜனாதிபதி தேர்தல்களில் முறையே மஹிந்தவுக்கும், கோட்டாபயவுக்கும் இப்பிரிவினரே அமோக ஆதரவை வழங்கியிருந்தார்கள். 2022 பொருளாதார நெருக்கடியின் போது எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் போன்ற பிரச்சினைகள் அவர்கள் இதுவரையில் அனுபவித்து வந்த ‘Comfort Zone’ இலிருந்து அவர்களை வெளியில் எடுத்து வந்தன. அந்த நிலையில், ராஜபக்சகளை ஆதரித்த அதே அளவு தீவிரத்துடன் அவர்களை எதிர்க்கவும் தொடங்கினார்கள்.
சுருக்கமாகச் சொன்னால் 2019 இல் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய படித்த சிங்கள நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் பல இலட்சக்கணக்கில் இப்பொழுது திசைகாட்டியின் பக்கம் வந்திருக்கிறார்கள். இந்த அலை ‘கம்யூனிஸ்ட் / சோஷலிச ஆதரவு அலை அல்ல’. என்பதை முதலில் சொல்ல வேண்டும். அநுர குமாரவும், அந்த அணியின் ஏனைய தலைவர்களும் (குறிப்பாக லால் காந்த போன்றவர்கள்) அதனை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.
ஜேவிபி / என்பிபி மேடையில் கழுத்துப்பட்டி அணிந்த கனவான்கள் ஏராளம் பேர் உட்கார்ந்திருக்கும் காட்சி மற்றொரு சுவாரஸ்யம். யுஎன்பி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி போன்ற பாரம்பரிய கட்சிகளின் பிரச்சார மேடைகளில் கூட முன்னர் அந்த மாதிரியான காட்சிகள் தென்படவில்லை.
கட்சிக்கு ஒரு கண்ணியமான, மத்திய தர வர்க்க முகத்தோற்றத்தை முன்வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தின் குறியீடு அது. ஒரு பெரும்போக்கு அரசியல் கட்சியாக (Mainstream Political Party) மாற்றமடைவதற்கு ஜேவிபி செலுத்தியிருக்கும் விலையே என்பிபி அணியின் இணைப்பு.
1971 மற்றும் 1987 – 1989 ஜேவிபி கிளர்ச்சிகளின் போது நிலவிய இலங்கை சமூகம் – குறிப்பாக சிங்கள சமூகம் – இப்பொழுது பெரும் மாற்றங்களை எதிர்கொண்டிருக்கின்றது. நகர்ப்புறங்களிலும், கிராமப் புறங்களிலும் புதிய மத்திய தர வர்க்கத்தினர் எழுச்சியடைந்திருக்கிறார்கள். இன்றைய இலங்கையின் நுகர்வு கலாசாரத்தின் பிரமாண்மான வளர்ச்சியின் பின்னணியில் இருந்து வருபவர்கள் அவர்கள். முன்னைய தலைமுறைகளிலும் பார்க்க முற்றிலும் வேறுபட்ட அபிலாஷைகளை கொண்டிருப்பவர்கள்.
இலங்கை பொது சமூகத்தில் 2022 இன் பின்னர் ஓங்கி ஒலித்து வரும் – ‘உடனடியாக எமக்கொரு System Change தேவை’, ‘225 பேரையும் துரத்தியடிப்போம்’ போன்ற கோஷங்களை இச்சமூகப் பிரிவினரே கையில் எடுத்திருக்கிறார்கள்.
காலிமுகத்திடல் அரகலய பூமியில் குமார் குணரத்னத்தின் ‘பெரட்டுகாமி’ கட்சியினால் முன்வைக்கப்பட்ட சுலோகங்கள் அவை. ஒரு விதத்தில், தீவிர கம்யூனிஸ்டுகள் காண விழையும் சமூக மாற்றத்தை வலியுறுத்துபவை. ஆனால், இன்றைய இலங்கையில் அச்சுலோகங்கள் அதே அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை என்பதை இங்கு முக்கியமாக சுட்டிக் காட்ட வேண்டும்.
இந்தக் கோஷங்களை முன்வைத்து வருபவர்கள் எதிர்பார்க்கும் உண்மையான ‘System Change’ எது? இன்றைய ஊழல் அரசியல்வாதிகளை பிரதியீடு செய்யும் பொருட்டு எந்த வகையான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? அவர்களுடைய ஆதர்ச புர்ஷர்கள் யார்? தனது முறை வரும் வரையில் பொறுமையுடன் கியூ வரிசையில் காத்திருக்கும் ஒரு ஜனாதிபதி. போக்குவரத்து விதி மீறலொன்றை இழைத்து விட்டு அதற்கு அபராதம் செலுத்தும் ஒரு பிரதம மந்திரி. தனது பிள்ளையை பொறுப்புடன் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தந்தையான ஒரு அரச தலைவர் போன்றவர்களை காட்டும் காணொளிகளை புதிய தலைமுறையினர் பிரமிப்புடன் பார்க்கிறார்கள். தமது ஆதர்சங்களாக அவர்களை கொண்டாடி வருகிறார்கள்.
ஆனால், மேற்படி உதாரணங்கள் அனைத்தும் லிபரல் ஜனநாயக நாடுகளிலிருந்து எடுக்கப்பட்டவை என்பது தான் இங்குள்ள சுவாரஸ்யம். ஊழல், முறைகேடுகள் இல்லாத எவருக்கும் பாரபட்சம் காட்டாத அரச நிர்வாக கட்டமைப்புக்களுக்கான ஆதர்சங்களாகவும் இந்த மேலைய லிபரல் ஜனநாயக நாடுகளையே இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
” நான் சுதந்திரத்திற்கு முன்னர் பிறந்தவன். வாழ்நாள் முழுவதும் ஒரு தேசாபிமானியாகவே இருந்திருக்கிறேன். எனது வாழ்க்கையின் முதல் 75 ஆண்டுகளை இந்த மண்ணிலேயே கழித்தேன். ஆனால், இங்கு வாழ முடியாத நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் எனது பிள்ளைகள் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார்கள். அவர்களுடைய வற்புறுத்தலின் பேரில் பின்னர் நானும் அங்கு சென்றேன். இரு நாடுகளையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது தான் நாங்கள் எந்த அளவுக்கு சீரழிந்தவர்களாக இருந்து வருகிறோம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது” என்கிறார் 1971 ஜேவிபி கிளர்ச்சியில் சம்பந்தப்பட்டிருந்த ஒரு முன்னணி சிங்கள நாடகக் கலைஞர்.
மேற்படி கூற்று இன்று ஜேவிபி / என்பிபி அணியின் பின்னால் திரண்டிருக்கும் சிங்கள மத்திய தர வர்க்கத்தினரின் மதிப்பீடுகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் என்பவற்றின் துல்லியமான ஒரு பிரதிபலிப்பு எனச் சொல்லலாம்.
சரியாகச் சொன்னால் இலங்கையின் பொருளாதார கட்டமைப்பில் அவர்கள் ஒரு தலைகீழ் மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. இவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் நவ லிபரல் பொருளாதாரத்தின் ஆதரவாளர்கள்.
ஆகவே, இந்தப் பின்னணியில், அவர்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி வைக்கும் விடயத்திலும், அவர்களை தமது அணிக்குள் தக்க வைத்துக் கொள்ளும் விடயத்திலும் ஒரு எதிர்கால ஜேவிபி / என்பிபி அரசாங்கம் கடும் சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
(வெற்றியின் பின்னர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்னவாக இருந்து வந்த போதிலும்) ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார வெற்றியீட்டினால் அது சுதந்திரத்திற்கு பிற்பட்ட இலங்கை அரசியலில் ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய மாற்றமாக (Paradigm Shift) வரலாற்றில் பதிவு செய்யப்படும்.
மறுபுறத்தில், ஜேவிபி/என்பிபி வேட்பாளர் தோற்றாலும் கூட, அதனை அந்த அணி எதிர்கொண்ட ஒரு பின்னடைவாக கருத வேண்டியதில்லை. ஏனென்றால், வாக்குகளின் அடிப்படையில் அது நிச்சயமாக நாட்டின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாக எழுச்சியடைந்திருக்கும். அந்த மாற்றமும் இலங்கை அரசியலுக்கு இதுவரையில் இல்லாத ஒரு புதிய இயங்கியலை (Dynamics) எடுத்து வர முடியும்.