இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கத் தீர்மானித்தமையால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் குற்றச்சாட்டை இன்று (03) நாடாளுமன்றில் முன்வைத்தார்.
நீண்டகாலமாக நடத்தப்படாதுள்ள மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துவதற்கான சட்டச் சிக்கலைத் தீர்க்கும் வகையிலான தனி நபர் பிரேரணை ஒன்று எம்.ஏ.சுமந்திரனால் நீண்ட காலத்துக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கான சட்டத் தடைகள் நீக்கப்பட்டு இரண்டாம் வாசிப்பும் வாக்கெடுப்போ விவாதமோ இன்றி நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், இன்று அதனை நாடாளுமன்றில் மூன்றாம் வாசிப்புக்காக எடுத்துக் கொண்டு நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்று அது நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
இந்தநிலையில், நாடாளுமன்றில் உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், இந்த பிரேரணையை இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி முன்னதாக தம்முடன் இணங்கி இருந்த போதும், இலங்கைத் தமிழரசுக் கட்சி – சஜித் பிரேமதாசவை ஆதரிக்கத் தீர்மானித்ததை அடுத்து, ஜனாதிபதி பழிவாங்கும் வகையில் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தினார்.