வடகிழக்கு மக்களின் ஆதரவு காரணமாக சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்த ஊடக சந்திப்பு இன்று (03) மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இதில் முன்னாள் பிரதி அமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, சோ.கணேசமூர்த்தி ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்.
சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றக்கூடிய வகையிலும், நாட்டின் பொருளாதாரத்தினை முன்னேற்றக்கூடிய வகையிலும் வேட்பாளர் சஜித் பிரேதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளதாகவும் இதன்போது எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
நாட்டின் வடக்கு கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது நிர்வாகத்தில் மிகச் சிறப்பாக பொருளாதாரம் கட்டி எழுப்பப்பட்டு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களது எதிர்காலத்தை முன்னேற்றக் கூடிய வகையிலும் சிறப்பானதொரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து அவர் தேர்தல் களத்தில் நிற்கின்றார்.
இன்று தமிழரசு கட்சி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ள விடயத்தை நாம் வரவேற்று பாராட்டுகின்றோம். இதன் மூலம் வடக்கு கிழக்கு அனைத்து மாவட்டங்களிலும் மூவின மக்களாலும் நேசிக்கப்பட்டு ஒரு வெற்றி வேட்பாளராக காணப்படுகின்றார் .
இதன் மூலம் வடக்கு கிழக்கில் நிலவுகின்ற அதிகார பிரச்சனைகளுக்குரிய தீர்வு அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள வடக்கு கிழக்கு பகுதிகளுக்கான விசேட அபிவிருத்தி திட்ட செயற்பாடுகளை வெளிநாட்டு நிதி உதவியுடன் முன்னெடுக்க உள்ளார். எனவே வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மக்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வெற்றியின் பங்காளர்களாக வேண்டு மென ஹிஸ்புல்லா தெரிவித்தார்
பல்வேறுபட்ட மோசடிகளைக் கொண்ட அரசாங்கமாக இன்றைய அரசாங்கம் காணப்படுவதாக முன்னாள் பிரதியமைச்சர் சோ.கணேசமூர்த்தி இதன்போது கருத்து தெரிவித்தார்.
இலங்கையில் 29 தேர்தல்களில் தோல்வியடைந்த ஒரு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவர் உள்ளதாகவும், அவர் எந்த பதவியிலும் ஐந்து வருடங்களுக்கு மேல் நீடித்தது கிடையாது எனவும் இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.