பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறான மற்றும் பொய்யான தகவல்களை வெளியிடுவதை தடுக்குமாறு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன்விதான இன்று (05) தயாசிறி ஜயசேகரவிற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தயாசிறி ஜயசேகரவை பிரதிவாதியாக்கி வேலு குமாரவால் முன்வைக்கப்பட்ட வழக்கை பரிசீலித்த பின்னரே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அக்குரஸ்ஸேவில் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் தயாசிறி ஜயசேகர தெரிவித்த கருத்து ஒன்றின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த தவறான மற்றும் தீங்கிழைக்கும் காரணத்தினால் ஏற்பட்ட பாரபட்சத்திற்காக 500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு முறைப்பாட்டில் மேலும் கோரப்பட்டுள்ளது.
முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மாவட்ட நீதிபதி, தயாசிறி ஜயசேகரவின் முகநூல் பக்கத்திலோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் முகநூல் பக்கம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலோ இது தொடர்பான அறிக்கையை மேலும் வெளியிடுவதைத் தடுக்கும் தடை உத்தரவு பிறப்பித்ததுடன் மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி உண்மைகளை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.