கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்று விளங்கும் கத்தோலிக்க திருத்தலங்களில் ஒன்றான மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய அன்னை திருத்தல 70வது வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் மிக சிறப்பாக நிறைவு பெற்றது.
ஆயித்தியமலை புனித சதா சகாய அன்னை திருத்தலத்தின் திருவிழா பங்குத்தந்தை அருட்பணி ஜெரிஸ்டன் வின்சன் தலைமையில் கடந்த மாதம் 30ம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.
இன்றைய தினம்(08) திருவிழாவின் கூட்டுத் திருப்பலி ஓய்வு நிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களினால் நடாத்தப்பட்டது.
திருப்பலியைத் தொடர்ந்து மரியாளின் பிறந்த தினமாகிய இன்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன், அன்னையின் திருச்சுருப பவனியினை தொடர்ந்து ஆலய முன்றலில் நடைபெற்ற விசேட அன்னையின் திருச்சுருப ஆசீர்வாதத்துடன் கொடி இறக்கப்பட்டு திருவிழா மிக சிறப்பாக நிறைவு பெற்றது.
இத்திருவிழாவின் திருப்பலி பூஜையில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே ஜே முரளிதரன் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சத்யானந்தி, மட்டக்களப்பு 233ம் படைப்பிரிவின் கட்டளை தளபதி, ஆயத்தியமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மட்டக்களப்பு மறை மாவட்ட அருட்தந்தையர்கள் மற்றும் நாடு பூராவும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்களும் கலந்து கொண்டனர்.
சதேசமயம் ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய 70 வது பாதயாத்திரை புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்திலிருந்து நேற்று (07) காலை ஆரம்பமாகியது.
ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருத்தல வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இப் புனித யாத்திரையானது மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்ற விசேட திருப்பலியை தொடர்ந்து மட்டக்களப்பு மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் விசேட செபவழிபாடுகளுடன் அன்னையின் திருவுருவத்தை தாங்கிவாறு பாத யாத்திரை ஆரம்பமானது.
வீச்சுக்கல்முனை அன்னம்மாள் ஆலயம், வலையிறவுப் பாலம் ஊடாக ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் திருத்தலத்தை பாத யாத்திரை சென்றடைந்தது.
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவானோர் பாத யாத்திரையில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.