ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 21,439 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 10 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் விசேட வைத்தியநிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.
தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் தொடர்பில் புதன்கிழமை (21) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வருடம் ஜனவரி முதல் மே 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 21,439 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 10 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மட்டக்களப்பு, கண்டி, காலி, மாத்தறை, திருகோணமலை, கல்முனை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக அதிகளவான நோயாளர்கள் பதிவாகுவதை காணக் கூடியதாக உள்ளது.

வருடாந்தம் பருவப்பெயர்ச்சியின் பின்னர் நாட்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கண்டறியப்படுகின்றனர். நுளம்பு மற்றும் நுளம்பு குடம்பிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டது. 15 மாவட்டங்களில் உள்ள 95 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளை பிரதான கேந்திர நிலையமாக கொண்டு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், நுளம்பு பெருகுவதற்கு வாய்ப்பாக உள்ள பகுதிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது. நுளம்பு ஒழிப்பு நடவடிக்கையின் முதல் இரு தினங்களில் மாத்திரம் 10,613 பகுதிகளில் நுளம்பு பெருகியிருந்தமை அவதானிக்கப்பட்டதுடன், 1407 பகுதிகளுக்கு சிவப்பு சிச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 347 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு மேல் கடுமையான காய்ச்சல் நிலவும் பட்சத்தில் வைத்தியசாலையை நாடுவது நல்லது. அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களில் 45 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிடுகையில்,
நாட்டில் தற்போது டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய் தொற்று வெகுவாக பரவி வருகிறது. ஆகையால் அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் அறிகுறிகள் தொடர்பில் விழிப்புடன் செயற்படுங்கள். நோயை இனங்காண்பது அவசியம். நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்களை இனங்கண்டு அவற்றை இல்லாதொழிப்பதன் மூலம் இவற்றைக் கட்டுபடுத்தலாம் என்றார்.