கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.
நம்பகமான தரப்புக்கள் என்று கோடிட்டு இந்த செய்தியை கொழும்பின் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இருவேறுபட்ட கருத்துக்கள் எழுந்தமையால், மத்திய குழுவின் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பேரவையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, வேட்பாளருக்கு எதிராக ஐந்து உறுப்பினர்களும், ஆதரவாக மூன்று உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரது வேட்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா மற்றும் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்களில் ஒருவர் ஆகியோர் பரிந்துரைக்கு எதிராக வாக்களித்தனர்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபுபக்கர் ஆதம்பாவா ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.
ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர் கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரி அல்ல, வெளிநபர் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்தே இந்த நிராகரிப்பு நிகழ்ந்துள்ளது.
முன்னதாக, எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜெயசேகர மற்றும் ஹர்ச டி சில்வா ஆகியோர், கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்துக்குள் இருந்து ஒருவரை, இந்த பதவிக்கு நியமிப்பதே பாரம்பரியம் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.