முன்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் முகமாக கல்விக் கண்காட்சி நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் பேத்தாழை கலைமகள் முன்பள்ளியில் கடந்த திங்கட்கிழமை (09)அன்று இடம்பெற்றது.
முன்னபள்ளியின் அதிபர் திருமதி ஹேமலதா யேசுரெட்ணம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் திருமதி ரோகினி விக்னேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக கல்குடா கல்வி வலய ஆரம்ப கல்வி பிரதி கல்விப்பணிப்பாளர் சீ.தயாளசீலன், கோறளைப்பற்று பிரதேச செயலக சிறுவர் நன் நடத்தை உத்தியோகத்தர் அ.அழகுராஜ் ஆகியோர் உட்பட அரச தனியார் வங்கிகளின் உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் மொழி, ஆக்கம், அழகியல், தொடர்பாடல் சாதனங்கள் உள்ளிட்ட விடயங்கள் இயற்கை பொருட்களை கொண்டு கைப்பணி திறன் மூலம் மாணவர்களினால் தயாரிக்கப்பட்டு கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.
இவை யாவும் காண்போரை கவரக் கூடியதாக இருந்தது. கண்காட்சியில் சிறுவர் நூலகப் பகுதி, சந்தைப் பகுதி, கணினி தொடர்பாடல் சேவை, கடல் வழி போக்குவரத்து போன்ற விடயங்களும் உள்ளடங்கியிருந்தது. இவ் கண்காட்சியை பார்வையிடுவதற்காக கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட முன்பள்ளிகளின் மாணவர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.