ஜனாதிபதித் தேர்தல் வாக்கு சீட்டு விநியோக பணிகள் நேற்றுடன் நிறைவு. வாக்குச்சீட்டுக்கள் கிடைக்காதவர்கள் தமது வசிப்பிட பிரதேசத்தில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று தமது விபரங்களை உறுதிப்படுத்தி வாக்குச்சீட்டினை பெற்றுக் கொள்ள முடியும் என தபால் திணைக்களத்தின் பிரதி தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
தபால் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தபால்மூல வாக்குச்சீட்டுக்களில் 96 சதவீதமானவை பாதுகாப்பான முறையில் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மிகுதியை இவ்விரு நாட்களுக்குள் ஒப்படைப்போம்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை விநியோகித்தல் 84 சதவீதம் நிறைவடைந்துள்ளன. வாக்குச்சீட்டு விநியோகம் நேற்றுடன் (13) நிறைவடைந்துள்ளது. கடந்த 3 ஆம் திகதி முதல் வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இதுவரை வாக்குச்சீட்டு கிடைக்க பெறாதவர்கள் தமது வசிப்பிட பிரதேசத்தில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று தமது விபரங்களை உறுதிப்படுத்தியதன் பின்னர் வாக்குச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள முடியும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல ஆவணங்களும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி வாக்களிப்பு நிறைவடைந்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.