நாடளாவிய ரீதியில் கடந்த 14ம் திகதிவரை தேர்தல் வன்முறை தொடர்பாக 934 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் 8ம் திகதி தொடக்கம் 14 வரை தேர்தல் வன்முறை அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளது.
காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை சிறுவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்
மட்டக்களப்பு ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் கபே அமைப்பின் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் காண்காணிப்பாளர்களுக்கான விசேட கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மாவட்ட இணைப்பாளர் தேசியமானிய ஏ.சி.எம். மீராஸாஹிப் தலைமையில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட நிறைவேற்று பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
கபே அமைப்பு தேர்தல் தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்பட்ட தினத்தில் இருந்து 25 மாவட்டங்களில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றது இதுவரை கபே அமைப்புக்கு 934 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. இதில் அதிகளவான முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதிகளை மீறுகின்றது தொடர்பாக அவதானிக்க கூடியதாக உள்ளது.
2015, 2019 நடைபெற்ற தேர்தல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடும்போது சுமுகமான களநிலவரம் காணப்பட்டாலும், கடந்த 8 ம் திகதிக்கு முன்னர் சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் அரச சொத்து துஸ்பிரயோகம், போன்ற முறைபாடுகள் அதிகரித்திருந்ததுடன் அந்த காலப்பகுதியில் வன்முறைகள் குறைவாக இருந்தன 8 ம் திகதி தொடக்கம் 14 ம் திகதி வரையான காலப்பகுதியில் வன்முறைகள் அதிகரித்துள்ளது
அத்துடன் சமூகவலைத்தளங்களை பாவித்து வேட்பாளர்களை இழிவுபடுத்துகின்ற பொய்யான பிரச்சாரங்களை வீடியோ பதிவுகள், போலி முகநூல் மற்றும் வட்சாப் ஊடாகவும் பதிவுகள் இடப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடு சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடியதை காணக்கூடியதாக உள்ளது.
தேர்தல் ஒன்று வரும் போது சமாதானமான தேர்தல் ஒன்றை நடாத்த வேண்டும் என்பதற்காக தேர்தல் நடாத்துவதற்கு முன்னர் மாவட்ட இணைப்பாளர்கள் சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு சமாதான தேர்தலை செய்ய முடியாது. பிரதேசங்கள் மற்றும் எந்த எந்த இடங்களில் வன்முறை அதிகரிக்கப்படலாம் என பதிவுகளை செய்வது வழமை. இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலே காத்தான்குடி, ஏறாவூர், ஒட்டுமாவடி பிரதேசங்களில் வன்முறை அதிகரிக்கப்படலாம் என்கின்ற சூழ்நிலை இருந்தபோதிலும் இதுவரை எந்தவொரு பாரிய வன்முறைகள் இடம்பெறவில்லை.
சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாடளாவிய ரீதியில் எல்லா பிரதேசங்களிலும் சிவில் அமைப்புக்கள் தேர்தல் கண்காணிப்பாளர்களை சந்தித்து தேர்தல் கள நிலவரம் தொடர்பாக அறிக்கைகளை பெற்றுவருகின்றனர். அதேவேளை கபே அமைப்பு தேர்தல் தினத்தில் 3 ஆயிரம் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவுள்ளனர்.
இருந்தபோதும் அரசியல்கட்சியின் வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரிடம் வேண்டிக்கொள்ளுவது இதுவரை காலப்பகுதியில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாத நிலையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை எவ்வாறு நடத்திவந்தீர்களோ அதேபோன்று தேர்தல் தினத்திலும் அதனை தொடர்ந்து வரக்கூடிய 7 நாட்களுக்கு பின்னரான காலப்பகுதிக்குள் சமாதானமான தேர்தலுக்காக ஒன்றுபடவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.