வரலாற்றில் முதல் தடவையாக இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்று பொதுமக்களுக்காக ஒரு நாள் திறந்து வைக்கப்படவுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகம் இலங்கையின் மிகவும் பிரபலமான மற்றும் அழகான பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் எதிர் வரும் ஜூலை 01, 2023 சனிக்கிழமையன்று பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
வரலாற்றில் முதன்முறையாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படுகிறது. அன்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அழகை அனுபவிக்கவும், பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவர்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடவும், பேராதனைப் பல்கலைக்கழகம் பட்டங்கள் வழங்கும் பல்வேறு துறைகள் மற்றும் பாடநெறிகள் சம்பந்தமாக அறிந்து கொள்ளவும் உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு கிடைக்கும்.
2023 ஆம் ஆண்டுக்கான Open Day தொடக்க விழா மற்றும் முக்கிய நிகழ்வை பல்கலைக்கழகத்தின் செனட் கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதியில் துணைவேந்தர், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்க ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் நிபுணர்களை நீங்கள் தொடர்புகொள்ள முடியும். அன்றைய தினம் பல்கலைக்கழகத்தைச் சுற்றி ஒரு வழிகாட்டி சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவும், அறிவியல் கண்காட்சிகளைப் பார்வையிடவும், இசை, நடனம், பாடல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளைக் காணவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அன்றைய தினம் அனைத்து பீடங்களும் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படுவதால், எமது பல்கலைக்கழகத்தின் அதி நவீன ஆய்வக வசதிகள், நூலக வசதிகள் மற்றும் ஏனைய கல்வி வளங்கள் குறித்து நீங்கள் நன்கு அறிந்து கொள்ள முடியும்.
நீங்கள் ஒரு பாடசாலை மாணவராக இருந்தால், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சேருவது உங்கள் கனவாக இருந்தால், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நீங்கள் பெறக்கூடிய பட்டம், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு வாய்ப்புகளை அடையாளம் காண இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த பொன்னான வாய்ப்பை நழுவ விடாமல், பேராதனைப் பல்கலைகழகத்தின் Open Day 2023 இல் கலந்துகொள்ளுங்கள்.
பல்கலைக்கழகத்திற்கு உங்களை வரவேற்பதற்கும், 2023 ஆம் ஆண்டின் மறக்க முடியாத “திறந்த நாள் – Open Day” அனுபவத்தை உங்களுக்கு வழங்குவதற்கும் பேராதனைப் பல்கலைக்கழகம் காத்திருக்கிறது என இந்த நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.