இந்தியாவின் பிரசித்தி பெற்ற ஆலயமான திருப்பதியில் வழங்கப்படும் பிரசாதமான லட்டில் , விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்து உறுதி செய்யப்பட்ட ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது என்ற முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேச்சு தேசிய அளவில் வெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கான வாய்ப்பே கிடையாது என்று தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியிருந்த நிலையில், ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஓய்.எஸ் ஷர்மிளா இது பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று (19) மாலை தெலுங்கு தேசம் கட்சி, லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சிப் பிரமுகர் வெங்கட்ராமனா ரெட்டி ஊடகங்களுக்கு வெளியிட்டார்.
அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு ஆகியவை கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பாமாயில் கலந்து இருப்பதும் அதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.