இலங்கையின் 09 ஆவது நிறைவுவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலானது நாளை (21) நடைபெறவுள்ளதுடன், நேற்றுமுன்தினம் நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்களையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது தேர்தல் ஆணைக்குழு.
இலங்கை வரலாற்றில் அதிகூடிய வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக 2024 ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காணப்படுவதுடன், இதில் 39 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அதில் ஒருவர் காலமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத் தேர்தலில் அதிகூடிய வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் பிரதான போட்டியாளர்களாக சஜித், அனுர, ரணில், நாமல் மற்றும் அரியநேந்திரன் ஆகியோர் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவுடன் முடிவுற்ற தேர்தல் பிரச்சாரங்களில் இந்த 5 போட்டியாளர்களும் இறுதியாக பேசிய விடயங்கள் சிலவும், அதனுடன் சேர்த்து மக்களுக்கு இவர்கள் வழங்கிய வாக்குறுதிகள் சிலவும் இங்கு வாக்காளர்களின் சிந்தனைக்காக தரப்படுகின்றது.
அனுரகுமார திஸாநாயக்க
இவர் தனது இறுதி பிரச்சாரத்தின் போது தனது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை என்றும் எங்களுக்கு வாக்களிக்கும் மக்களின் கண்ணியத்தை பாதுகாப்போம் என்றும் உறுதியளிக்கின்றோம் என தெரிவித்திருந்தார். தங்கள் வெற்றியில் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள நாங்கள் பொறுப்புடன் செயல்படுவோம்.
பழைய தோல்வியுற்ற பொருளாதாரக் கொள்கைகள், நவீன உலகம் மற்றும் உலகின் புதிய போக்குகள் ஆகியவற்றுடன் ஒத்துப்போகத் தவறியதால் நாடு பொருளாதார குறைபாடுகளை சந்தித்தது.
எமது அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையிலும், உயர் தரத்திலும் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்யும்.
வரவை அதிகரிக்கவும், டொலர்கள் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தவும் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச
இவர் தனது இறுதி பிரச்சாரத்தின் போது 13இன் கீழ் உள்ள பொலிஸ்,காணி அதிகாரங்கள் எக்காரணங்களுக்காகவும் வழங்கப்படமாட்டாது என கூறி இருந்தார்.
மற்றும் 10 ஆண்டுகள் அதிகாரத்தை தன்னிடத்தில் தந்தால் இலங்கையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
நான் மற்றவர்களை போல் வாய்ப்பேச்சில் அல்லாது செயலிலே அனைத்தையும் காட்டுவேன் எனவும் தெரிவித்தார்.
அதேசமயம் நாமலை தேர்தலிலிருந்து விலகி ரணிலுக்கு வழிவிடுமாறு நாரஹேன்பிட்டி அபயராமய விகாரை தொடம்பஹல ராகுல தேரர் மகிந்தவிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமல் தனது பிரச்சாரத்தில் தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக எந்த இறுதி தீர்மானத்தையும் வெளியிடவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாச
இவர் தனது இறுதி பிரச்சாரத்தின் போது இலஞ்சம் மற்றும் ஊழலை முதலில் ஒழிப்போம் என்றும் சிலரைப் போன்று கட்டுக்கட்டாக பைல்களை வைத்துக்கொண்டு திருடர்களை பிடிப்போம் என்று பேசிக் கொண்டிருக்க மாட்டோம் என்றும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே திருடர்களை பிடித்திருக்கின்றோம் என்றும் சொல்வதைச் செய்கின்ற குழு ஒன்று தம்மோடு இருப்பதால் தம்மிடம் அரசியல் டீல் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் விவசாயிகளுக்கு முக்கிய வாக்குறுதி ஒன்றையும் வழங்கியுள்ள இவர் தனது இறுதி பிரச்சாரத்தின் போது மீனவர்களுக்கான எரிபொருள் நிவாரணத்தை வழங்குவோம் என்றும் மீன்பிடி தொழிலுக்கான உபகரணங்களின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றமையால் அதற்கான நிவாரணங்களையும் வழங்கி மீன் பிடித்தொழிலை விரிவாக்குவோம் என்றும் தெரிவித்தார்.
உலகிலே முதல் தரத்தில் காணப்படுகின்ற சிலோன் சினமன் கறுவாப்பயிரை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு வழியமைப்போம் என்றும் அத்தோடு உற்பத்தி தொழிற்துறை கலாச்சாரத்தை முன்னெடுத்து கொக்கல சுதந்திர வர்த்தக வலையத்தைப் போன்று மேலும் வர்த்தக வலையங்களை உருவாக்குவோம் என்றும் தொழிற்சாலை செயற் திட்டத்தை கிராமங்களுக்கு கொண்டு சென்று உற்பத்தி தொழிற்துறையை அபிவிருத்தி அடையச் செய்வோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்திருந்தார்.
விவசாயிகளுக்கும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் எரிபொருள் நிவாரணங்களை வழங்குவதோடு 24 மாதங்களுக்குள் வறுமையை ஒழிக்கும் முகமாக ஐந்து திட்டங்களின் கீழ் இல்லத்தரசிகளை மையமாகக் கொண்டு மாதம் ஒன்றுக்கு தலா 20000 ரூபா நிவாரணத்தை வழங்குவோம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
விவசாயத்தை மேம்படுத்துவதற்காக 50 கிலோ கிராம் உரத்தை 5000 ரூபாவுக்கு வழங்குவோம் என்றும் பல்வேறு வகையான விவசாயங்களில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய நகரங்களை உருவாக்குவோம் என்றும் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாகவே நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்திருந்தார்.
ரணில் விக்கிரமசிங்க
இவர் தனது இறுதி பிரச்சாரத்தின் போது 2022ஆம் ஆண்டு இந்த நாட்டில் வரிசையில் நிற்காத குடும்பத்தைக் கண்டுபிடிப்பது மிக கடினம் என்றும் டைட்டானிக் கப்பலைப் போன்று மூழ்கிக் கொண்டிருந்த இந்நாட்டை தாம் பொறுப்பேற்று கப்பலிலுள்ள மக்களை அழைத்துக் கொண்டு சரியான பாதையில் பயணித்து வருகின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இலங்கை போன்ற நாட்டிற்கு ஏற்ற கடன் நிலைத்தன்மை தொடர்பில் உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளேன்.
மேலும் 18 நாடுகள் எமக்கு கடன் வழங்கியிருந்தன என்றும் அந்த நாடுகளில் 17 நாடுகளுடனும், சீனாவுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி மூன்றாவது குழுவான தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடன் உடன்பாடு எட்டப்படும் என்றும் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றி நாட்டை வங்குரோத்து நிலையை உத்தியோகபூர்வமாக அகற்றும் நிலைக்கு கொண்டு வந்து விட்டதன் பின்னே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்றும் கூறியுள்ளார் .
ஆனால் இந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அத்தோடு புதிய பொருளாதாரத்தை உருவாக்காவிட்டால் மீண்டும் கடன் வாங்கி நம் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் கூரியதோடு சிறந்த பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான ஆணையை வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாக்கியசெல்வம் அரியநேந்திரன்
இவர் தனது இறுதி பிரச்சாரத்தின் போது “ஈழத் தமிழ் மக்கள் பல அகிம்சை ரீதியாக போராடி அதன் பின்னர் ஆயுத ரீதியாகவும் போராடி வந்த நிலையில் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் தற்போது இராஜதந்திர ரீதியாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
எமது அரசியல் தலைமைகள் அகிம்சை ரீதியாக போராடிய போது மக்கள் வழங்கிய வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற மக்கள் ஆணை இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது.
பல்வேறு வழிகளிலும் போராடி பலதையும் இழந்திருக்கிற இந்த நேரத்தில் நாம் இராஐதந்திர ரீதியாக போராடுகிற நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். இதனூடாக நாம் எமது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். இப்போது நாம் முன்னெடுத்துள்ள பயணமும் பதவிக்கானது அல்ல.
எமது இனத்திற்காக பல்வேறுபட்ட போராட்டங்களை அகிம்சை ரீதியில் நடாத்தியவர்கள் நாங்கள். முதலில் தந்தை செல்வா அகிம்சை ரீதியில் போராடினார். அதன் பின்னர் பிரபாகரன் போராடியிருந்தார்.
இந்த தலைவர்கள் இனத்திற்காக போராடிய காலங்களில் வடக்கு கிழக்கை எந்தவிதத்திலும் பிரித்து பார்க்கவில்லை. இங்கிருந்த வடக்கு தலைமைகள் கிழக்கை விட்டு எதையும் செய்யவும் இல்லை. குறிப்பாக வடக்கு கிழக்கை இணைத்தே அவர்கள் தமது செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.
வடக்கு கிழக்கு என்ற பாகுபாடில்லலாமல் இரண்டையும் இணைத்து அதிலும் கிழக்கில் இருந்து ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப்படையிலேயே என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். பல்வேறு தரப்பினரதும் ஆதரவைப் பெற்றிருக்கின்ற பொது வேட்பாளர் விவகாரம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் திரட்சியாகவே பார்க்கிறேன்.
இதில் என்னை தேர்ந்தெடுத்ததில் பெருமைபடுகிறேன் அத்தோடு தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமைக்கான திரட்சி தொடர வேண்டும். அதுவே எமக்கு எப்போதும் பலமானதாக இருக்கும். இதனை அரசியல் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.