மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் 3 இலட்சத்து 6 ஆயிரத்து 852 பேர் வாக்களித்து 70 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 81 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜே.ஜே. முரளிதரன் தெரிவித்தார்.
நாட்டின் 09 வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தோர்தல் இன்று சனிக்கிழமை (21) பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலச்சத்து 49 ஆயிரத்து 686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன், இலங்கையில் ஆகக்குறைந்த வாக்களார்களான இரண்டு பேரை கொண்ட மாந்தீவு வைத்தியசாலை வாக்களிப்பு நிலையம் உட்பட 442 வாக்களிப்பு நிலையங்களில் இந்த வாக்களிப்பு இடம்பெற்றது. இந்த தேர்தல் கடமையில் 6750 அரச உத்தியோகத்தர்களும் 1514 பொலிசார், விசேட அதிரடிப்படையினர் என பலர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.
இந்த தோர்தலில் ஜனாதிபதி தமிழ் வேட்பாளர் பா. அரியநேந்திரன் அவரது ஊரான அம்பலாந்துறை கலைமகள் வித்தியாலயத்தில் உள்ள வாக்கு சாவடியில் அவரது வாக்குகளை பதிவு செய்தார். அதேவேளை அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, இராஜாங்க அமைச்சர்களான எஸ்.வியாழேந்திரன், சி.சந்திரகாந்தன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரன் ஆகியோர் அவர்களது பிரதேசத்திலுள்ள வாக்கு சாவடியில் வாக்குகளை பதிவு செய்தனர்.
இருந்தபோதும் காலை 7 மணி தொடக்கம் 9 மணி வரை சுமார் 18 வீதமான வாக்குகள் பதியப்பட்டிருந்ததுடன், அதன் பின்னர் மந்தகதியிலேயே வாக்குகள் பதிவு இடம் பெற்றுள்ளது. முஸ்லீம் பிரதேசங்களான ஓட்டுமாவடி, ஏறாவூர், காத்தான்குடி பிரதேசங்களில் மக்கள் அதிகளவான வாக்குகளை பதிவு செய்தனர். ஆனால் தமிழ் பிரதேசங்களில் மக்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாததையடுத்து மந்தகதியிலே வாக்கு பதிவுகள் இடம்பெற்றது.
இதேவேளை சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பெபரல் அமைப்பு, கபே அமைப்பு போன்ற தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு வாக்கு சாவடிகளுக்கும் கள விஜயம் சென்று கண்காணிப்பில் இடுபட்டனர். இதன் போது கபே அமைப்பு 14 வாக்கு சாவடிகளுக்கு விஜயம் மேற்கொண்ட போது அங்கு வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்யும் மேசை சாமாந்தரமாக இருக்கவில்லை எனவும், அதில் ஓட்டை ஓடிசல்கள் இருந்துள்ளதாகவும் இதனால் வாக்கு பதிவு செய்யும் போது அதில் தேசம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகாமக இருந்துள்ளதாகவும் இதனால் அளிக்கப்படும் வாக்கு செல்லுபடியற்றதாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கபே அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் தேசியமானிய ஏ.சி.எம். மீராஸாஹிப் தெரிவித்தார்
வாக்களிப்புகள் அனைத்தும் மாலை 4 மணிக்கு முடிந்தவுடன், வாக்கு பெட்டிகள் பொலிசாரின் பாதுகாப்புடன் வாக்கெண்ணும் மத்தியஸ்தானமான மட்டக்களப்பு இந்து கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது. இதனை வாக்கெண்ணும் மத்தியஸ்தானத்தில் பெறுப்பேற்கும் நிகழ்வையும் தபால் மூலம் வாக்களித்த வாக்குகளையும், அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜே.ஜே. முரளிதரன் ஆரம்பித்து வைத்தார்.