பேச்சுக்கு தமிழ் கட்சிகள் ஒன்றாக வரவேண்டுமென்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். இதற்கு பின்னால் இரண்டு கருத்துக்கள் மறைந்திருக்கின்றன – ஒன்று தமிழ் கட்சிகள் ஒருபோதும் ஒன்றாக வரப்போவதில்லை என்பது – அடுத்தது தமிழ் கட்சிகளை தனித்தனியாகத் தங்களால் கையாள முடியுமென்பது. ஏனெனில் ஒன்றாக வாருங்கள் பேசுவோம் என்பது ஒரு புதிய வாதமல்ல. மாறாக நீண்டகாலமாக சிங்கள தலைமைகள் கூறிவருகின்ற ஒரு விடயம்தான். இதனை இப்போது ரணில் கூறுகின்றார். அண்மையில் இங்கிலாந்தில் தமிழ் புலம்பெயர் சமூகத்துடன் கலந்துரையாடிய அண்ணாமலை தமிழ் கட்சிகள் இந்தியாவிடம் ஒன்றாக வரவேண்டுமென்று கூறியிருந்தார்.
இந்த இடத்தில் தமிழ் கட்சிகளின் தலைமைகள் கேட்க வேண்டிய கேள்வி நாங்கள் ஒன்றாக வந்தால் நீங்கள் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்களா – அதனை பகிரங்கமாக சிங்கள மக்கள் முன்னால் வையுங்கள். முதலில் தென் பகுதியிலிருக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக தமிழ் மக்களுக்கு எதை வழங்குவீர்களென்று கூறுங்கள். ஆனால் தமிழ் கட்சிகளோ விடயங்களை தர்க்க ரீதியாக முன்வைப்பதில்லை.
அண்ணாமலையை நோக்கி பிரித்தானிய தமிழ் பேரவை ஒரு கேள்வியை முன்வைத்திருக்க வேண்டும் – அதவாது நாங்கள் ஒன்றாக வந்தால் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்துமாறு இந்தியா அதன் உச்சபட்ச பலத்தை பிரயோகிக்குமா? ஏனெனில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேவைப்பட்டால் மீளவும் இந்தியா படைகளையும் அனுப்ப முடியும். அவ்வாறானதொரு வாக்குறுதியை பாரதிய ஜனதா கட்சியால் வழங்க முடியுமா? ஏனெனில் தமிழ் மக்களின் பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் பேசுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஒன்றாக வாருங்கள் – உங்களிடம் ஒற்றுமையில்லை – அதுதான் பிரச்னை என்றவாறு விடயத்தை திசைதிருப்பும் வகையிலேயே சிங்கள ஆளும் தரப்பு நடந்துகொள்கின்றது. ஆனால் மறுபுறம் சிங்கள ஆளும் தரப்பு தமிழ் மக்களின் பிரச்னையில் ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்றதா என்றால் அப்படியில்லை.
இந்தப் பின்புலத்தில் தமிழ் கட்சிகள் ஒன்றாக வரவேண்டுமென்று ரணில் கூறுவது வேடிக்கையானது – அதற்கு வலுவான எதிர்வினையாற்ற முடியாமல் தமிழ்த் தலைமைகள் என்போர் இருப்பது அதிலும் வேடிக் கையானது. ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தப்போவதாக கூறினார் – ஆனால் இதனை ஓர் உள்நோக்கத்தோடு தான் அவர் கூறியிருக்கின்றார் என்பது இப்போது தெளிவாகின்றது. ஏனெனில் 13ஆவது திருத்தச்சட்டம் என்றவுடன் யாழ்ப்பாணத்து வீதிகளில் இறங்கி எதிர்ப்பு தெரிவிக்கவும் ஒரு கட்சி இருக்கின்றது – அதேவேளை சமஷ்டியை போடாவிட்டால் மோடிக்கான கடிதத்தில் கையெழுத்திட மாட்டேன் என்று – கூறி அடம்பிடித்த சம்பந்தன் தலைமையிலான அணியும் இருக்கின்றது. இதனை ரணில் நன்கறிவார்.
ரணில் இப்போது ஒன்றாக வாருங்கள் என்று சொல்வதற்கு பின்னால் அவரின் தந்திரம் தெரிகின்றது. இதனைப் புரிந்துகொள்ளாமல் தமிழ் கட்சிகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. ரணிலை நோக்கி தமிழ் கட்சிகள் கூற வேண்டும் – 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றோம் – நீங்கள் அதனை அமுல்படுத்தும் விடயத்தில் முன்னேற்றத்தை காண்பியுங்கள். முதலில் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள். அதன் பின்னர் ஒன்றாக உங்களுடன் பேசுவதைப் பற்றி நாங்கள் தீர்மானிக்கின்றோம். ஒன்றாக வாருங்கள் என்பதை ஒரு தந்திரமாக மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு தமிழ் கட்சிகள் அனுமதிக்கக்கூடாது. ஒன்றாக வந்தாலும் வராவிட்டாலும் ஒரு சமூகத்தின் அடிப்படையான பிரச்னைகளைப் புறம்தள்ள முடியாது. தமிழ் மக்களின் பிரச்னைக்கான தீர்வை இழுத்தடிக்கும் ஒரு சூழ்ச்சிக் கதைதான் ஒன்றாக வாருங்கள் என்பது.