இலங்கையினுடைய பாராளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், இதுவரை காலமும் அதிகாரத்தைத் தமக்குள் பகிர்ந்து கொண்ட சிங்கள தரப்பு அரசியல் அதிகார கும்பலும், தமிழ் தரப்பு அதிகார நாசகார விசமிகளும் பதட்டமடைவதை பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
அனுர குமார திசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், இலங்கையில் ஏற்படுகின்ற மாற்றங்கள், இந்த அரசியல் அதிகாரத்தை இதுவரை மாறி மாறி பகிர்ந்து கொண்ட இந்த சமூக அட்டைகள் அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு மீண்டும் அந்த சௌகரியத்தை அடைய முடியாமல் போய்விடும் என்ற பதட்டம் அவர்களுடைய நடவடிக்கைகளில் தெரிய ஆரம்பிக்கிறது.
தெற்கிலே சந்திரிகாவும்,சஜித்தும் ஏன் ரணிலும் கூட தாம் ஒன்றிணைந்து என்.பி.பி யை எதிர்கொள்ள வேண்டும் அல்லது நமது அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என பேச ஆரம்பித்து விட்டார்கள்.
மறுபுறம் வடக்கு கிழக்கில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வெவ்வேறு குழுக்களாக பிரிந்து, சிதைந்து பொது வேட்பாளர் என்றும், சஜித்துக்கு ஆதரவு என்றும், ரணிலுக்கு ஆதரவு என்றும் தங்களுக்குள்ளே முட்டி மோதி, அடிபட்டுக் கொண்டு, அறிக்கை விட்டுக்கொண்ட இந்த சுயநலவாத கும்பல்கள் அனுர மீது ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையும், நாட்டிலேயே ஏற்பட்டிருக்கும் மாற்றத்திற்கான நம்பிக்கை அலையும், எங்கே இதுவரை காலமும் தாம் அனுபவித்த அத்தனை சௌகரியங்களையும், அதிகார பலன்களையும் இழந்து விடுவோமோ என்கின்ற அச்சம் மேலோங்கியவுடன், மீண்டும் கூட்டமைப்பாக இணைய வேண்டுமென்றும், ஒன்றாக தமிழ் தேசியத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் ஓடி திரிவதை பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
இங்கே இவர்களது நோக்கம் தமிழ் தேசியம் தனது இருப்பை இழந்து விடக்கூடாது என்பதல்ல. இதுவரை காலமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, உழைக்கும் மக்களுக்கு எதிராக தமிழ்த்தேசிய பூச்சாண்டி காட்டி, தமக்குள் மட்டுமே அனுபவித்து வந்த அந்த அதிகார பலமும் அதனுடன் கூடிய பணவளமும் தங்களை விட்டு, புதிய சமூக அக்கறை உள்ள இளைஞர்களை நோக்கி நகர்ந்து விடக் கூடிய அபாயத்தை தடுக்க வேண்டுமாயின் ஒரே வழி இந்த சாக்கடை கட்சிகள் தமக்குள் பிரிந்து நிற்காமல் ஒன்றாக நின்று அந்த அதிகார பலம் தங்களை விட்டு நழுவி விடாமல் பார்த்துக் கொள்வதே அதன் நோக்கமாகும்.
தெற்கிலும் சரி, வடக்கு கிழக்கிலும் சரி இவர்கள் மக்கள் சார்ந்து எப்போதும் சிந்தித்தவர்கள் கிடையாது. மக்கள் சார்ந்து குறைந்தபட்சமேனும் சிந்திக்கின்ற ஒரு அரசியல் சக்தி தன்னை நிலை நிறுத்த முற்படுகின்ற பொழுது இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அச்சம், இவர்களுடைய வேற்றுமைகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு முதலில் தங்கள் இருப்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற நிலையை இவர்களுக்கு தோற்றுவித்திருக்கிறது.
தென் பகுதி மக்கள் எவ்வாறு ஒரு தெளிவான நிலைப்பாட்டுக்கு தங்களை தயார்படுத்தி ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை இலங்கை தேசத்தில் உருவாக்க வேண்டும் என்கின்ற முடிவை துணிந்து எடுத்தார்களோ அதேபோன்று வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் சமூகங்கள் இந்த பீடைகளை மீண்டும் பதவியில் அமர்த்தாது தமது சுயநலத்துக்காகவே இயங்குகின்ற தமது அதிகார நலனை தற்காத்துக் கொள்வதற்காக மக்களின் அழிவின் மேல் சவாரிசெய்கிற இந்த சுயநலக் கூட்டம் விரட்டியடிக்கப்பட வேண்டிய ஒரு பொற்காலம் நவம்பர் 14ஆம் திகதி வடக்கு, கிழக்கு மக்களிடம் கையளிக்கப்பட்டு இருக்கிறது.
இதே சாக்கடைகளை பாராளுமன்றம் அனுப்பிவிட்டு அவர்கள் தீர்வுக்காக போராடுவார்கள் என்று காத்துக் கொண்டிருக்கப் போகிறீர்களா? இல்லை புதியவர்களை தெரிவு செய்து ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் மாற்றத்தில் பங்கு கொண்டு காத்திரமான, சமூக பங்காற்றி தமிழ் பேசும் சமூகங்களின் வளர்ச்சியோடு , நமது அடிப்படை உரிமைகளையும் வென்றெடுக்கும் புதிய இரத்தத்தை பாய்ச்ச வேண்டிய இந்தத் தருணத்தை நாம் தவறவிட போகிறோமா?
மாற்றத்துக்கான சந்தர்ப்பங்கள் எமக்கு ஒவ்வொரு தேர்தலிலும் வந்து விடுவதில்லை. இந்த நவம்பர் மாதம் நடக்க இருக்கின்ற தேர்தல் அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை எங்களுக்கு வழங்குகின்றது .அந்த சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்த போகிறோமா? இல்லை ஆண்ட பரம்பரை கனவிலே மூழ்கி மேலும் அழிந்து போக போகின்றோமா? என்பதை வாக்குச்சீட்டு கையில் வைத்திருக்கின்ற ஒவ்வொரு வடக்கு கிழக்கு வாழ் குடிமகனும் தீர்மானிக்க வேண்டிய மிக முக்கிய காலகட்டம் இது.