அரசின் நிர்ணய விலையில் அரிசியை விற்பனை செய்வதில் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கிடையே முரண்பாடு நிலவுகிறது.
தற்போது சந்தையில் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இது பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களினால் ஏற்படுத்தப்படுவதாகவும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றம் சுமத்துகின்றனர்.
ஒரு கிலோ நாட்டரிசி நெல்லை 122 ரூபாவுக்கு கொள்வனவு செய்து ஒரு கிலோ அரிசியை 220 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியாது என பொலன்னறுவை மாவட்ட அரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் அகில இலங்கை அரிசி ஆலை உரிமையாளர்கள் நேற்றுமுன்தினம் (28) தெரிவித்தனர்.
நாட்டு அரிசிக்கு சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டுக்கு காரணம் நாட்டு நெல் விளைச்சல் குறைவாக இருப்பதே ஆகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
விவசாயிகள் நாட்டு நெல் பயிர்ச்செய்கையை குறைத்துவிட்டதாகவும் 80 சதவீதத்துக்கும் அதிகமான நெல் பயிர்ச்செய்கையாளர்கள் கீரி சம்பா செய்கையை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார். நெல் செய்கையில் இந்த ஏற்றத்தாழ்வைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
அரசின் கட்டுப்பாட்டு விலையில் நாட்டு அரிசி விற்கப்படும் என பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.
பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் நடத்திய ஊடக சந்திப்பில், அதன் தலைவர் டட்லி சிறிசேன இதனைத் தெரிவித்திருந்தார்.
இதுவரைக் காலமும் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்கப்படவில்லை எனவும், இது விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் மேற்கொள்ளப்படும் பாரிய அநீதி எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் டட்லி சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன் தற்போதைய ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை ஆதரிப்பதாக டட்லி சிறிசேன கூறுகிறார்.
கடந்த அரசாங்கங்களுடன் இணைந்து செயற்பட்ட வகையில் தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முடியாது என்பதை அவர் புரிந்துகொண்டுள்ளதையே இது காட்டுவதாகவும் சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் அரசின் நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்வதால் பாரிய நெருக்கடியை சந்திக்க நேருமெனவும் டட்லி சிறிசேனவின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மாரந்தகஹமுல்ல அகில இலங்கை நடுத்தர மற்றும் சிறு அரிசி வியாபாரிகள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.