இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மாண்புமிகு. அனுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கான திறந்த மடல்!
தாங்கள் பயங்கரவாதச் சட்டம் (PTA) என்றால் என்ன என்பதை நன்கு உணர்ந்தவர்! அதனால் பாதிக்கப்பட்டவர், நீங்கள் மாத்திரமல்ல உங்கள் கட்சியின் பல உறுப்பினர்கள் மிகவும் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டவர்கள்!
ஏன் 1990 ஆண்டு தமிழ், சிங்கள அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த (New magazine prison) சிறைச்சாலையில் ஜேவிபி (JVP) தோழர்கள் தடுத்து வைக்கப்பட்ட A,B ward இல் காலை உணவு வேளையில் ஏற்பட்ட முரண்பாடானது கூர்மையடைந்து (JVP) தோழர்களுக்கும், சிறைக்காவலர்களுக்குமான சண்டையில் விமானபடையின் சிறப்பு அணியும், சிறைக்காவலர்களும் சேர்ந்து எல்லோரையும் சிறைக்குள் பூட்டிய பின்னர் 3 ஜேவிபி (JVP) தோழர்களை அடித்தே கொலை செய்தார்கள்!
அதற்கு C ward இல் நின்று பார்த்த தமிழ் அரசியல் கைதிகளே சாட்சிகள்!
அதற்கும் அப்பால் இந்த சட்டத்தினால் பல ஆயிரம் மாணவர்கள், அப்பாவிகள் பாதிக்கப்பட்ட வரலாற்றை இலங்கைத்தீவு தன்னகத்தே கொண்டுள்ளது. இதற்கு முன்னர் ஜனாதிபதியாக வந்தவர்கள் தமிழர்களை கொலை செய்தவர்களுக்கும், சட்டத்திற்கு முரணாக செயற்பட்ட பலருக்கும், புத்த பிக்குகளுக்கும், நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பை வழங்கி விடுதலை செய்தார்கள்!
நீங்கள் இந்த நாட்டை பொறுப்பேற்ற பின்னர் சில அதிரடி மாற்றங்களை உண்டுபண்ணுவதை அவதானிக்க முடிகின்றது!
தமிழர்களாகிய நாம் போராட்ட சூழலில் வாழ்ந்து உயிரை,உடைமையை, சொந்தங்களை இழந்து மிகவும் சோர்வடைந்துள்ளோம்! எங்களுக்கு தங்கள் அரசு என்ன செய்யலாம்?
இனப்பிரச்சினைக்கான தீர்வு!
மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே!
1987 இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பொழுது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புப் போன்று!
அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்குமான உடன் விடுதலை!
பயங்கரவாத தடைச்சட்டங்களின் கீழ் 1988 -2024 வரை தொடுக்கப்பட்ட வழக்குகளை இரத்துச் செய்தல்!
அதன் மூலம் ஒரு அமைதியான, பொருளாதார, மற்றும் சகல துறைகளிலும் வளர்ச்சிமிக்க நாட்டை கட்டியெழுப்புதல்!
1988-2024 வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு விடுதலையும்,பின்னர் நாட்டை விட்டு வெளியேறி நாடு திரும்ப முடியாதுள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிப்பதன் மூலம் நாட்டினை வெற்றிப் பாதை நோக்கி வழிநடத்த முடியும்!
தயவு செய்து அவர்களின் பாதுகாப்பிற்கு அரசு உத்தரவாதம் அளிப்பதும் மற்றும் அவர்கள் எந்த நேரத்திலும் நாட்டிற்குச் சென்று முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்ற விசேட வர்த்தமானி அறிவித்தலை விடுவதன் மூலம் கண்டிப்பாக அதிக முதலீட்டாளர்கள் எமது தாய்நாட்டை நோக்கி வருவதற்கான ஏதுவான சூழலை நாட்டின் தலைவராக ஏற்படுத்துதல்!
அவர்களின் வருகை மாத்திரமல்ல நம் நாட்டின் பொருளாதார பிரச்சனை மற்றும் நீங்கள் அமைக்க விரும்பும் ஆட்சியை நோக்கி இதன் பலாபலன்கள் அமையும்!
இன்னும் இரண்டே மாதத்தில் மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி இலங்கைத் தீவானது நகரும்!
புலம்பெயர் மக்களின் மனங்களை வெல்லலாம்!
நாட்டில் வாழும் அனைத்து மக்களும் வரவேற்பர்!
உங்கள் அரசியல் வாழ்வில் இது மிகப்பெரும் வரலாராக அமையும்.