மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் இருக்கும் Singing Fish Park எனப்படும் சிறுவர் பூங்கா தற்போது கடும் சேதங்களுக்கு உள்ளான நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கல்லடி கடற்கரை, Singing Fish Park என்பன விடுமுறை காலங்களில் காத்தான்குடி,மட்டக்களப்பு ,ஏறாவூர் மற்றும் அதனை சூழவுள்ள அனைத்து பிரதேச மக்களும் வந்து பொழுதை கழிக்கும் ஓர் இடமாக காணப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்னர் மக்களின் பாவனைக்காகவும், சுற்றுலா விருத்தி நோக்கங்களுக்காகவும் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் மக்கள் குடும்பங்களாக வந்து பொழுதைக்கழிக்கும் வண்ணம் கபானாக்களும், நடைபாதையும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதன் நிலைமை மனித பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுகிறது.அதேபோல் அதற்கு பின்னரான காலப்பகுதியில் (2017) அமைக்கப்பட்ட இந்த சிறுவர் பூங்கா தற்போது பராமரிப்பு இன்மை காரணமாக மிகவும் மோசமாக நிலையில் காணப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சேரிசேனவின் தலைமையின் கீழ் ரூபாய் 5375 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட இந்த சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் விளையாட இரும்பினால் அமைக்கப்பட்ட ஊஞ்சல்கள் காணப்படாத நிலையிலும்,
சறுக்கு மரம் மற்றும் மேலும் சில பொருட்கள் இத்துப்போய் கரல் கட்டிய நிலையில் காணப்படுவதாகவும்,அதில் விளையாடும் சிறுவர்களுக்கு உபாதைகள் ஏற்படுவதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் இன்னும் சிலநாட்களுக்கு முன்பு கல்லடி கடற்கரையில் காணப்படும் ஒரு சிறிய கட்டடத்தில் மது அருந்தி விட்டு மூன்று சிறுவர்கள் போத்தல்களை அதன் உள்ளேயே உடைத்து வீசுவதை பார்க்கக்கூடியதாக இருந்தது இது குறித்து அங்கு பொதுமக்களுடன் கலந்துரையாடுகையில் கஞ்சா,மது இன்னும் சில போதை பொருட்கள் அந்த கட்டடத்தில் பாவிக்கப்படுவதாகவும் குறிப்பாக இளம் சமுதாய சிறுவர்கள்தான் இதனை செய்கின்றனர் என்று தெரிவித்திருந்தனர்.
பொதுமக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்ட இத்தகைய சுற்றுலா விருத்தி அம்சங்கள் சேதமடைவதையும்,சேதப்படுத்துபவர்களையும் மட்டக்களப்பு மாநகர சபை, மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரிகளும் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டால் மட்டுமே இருப்பதையும் இழக்காமல் பாதுகாக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.