நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ‘மனசிலாயோ, ஹண்டர் வண்டார்’ போன்ற பாடல்கள் தற்போதுவரை ட்ரெண்டிங்கில் உள்ளன. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியாகி சிறந்த கவனம் பெற்றது. இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த பழனிவேலு என்பவர், ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் “வேட்டையன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும். அதுவரை வேட்டையன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் “ என தெரிவித்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேட்டையன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு மறுத்துள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மற்றும் லைகா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.