இலாபம் ஈட்டும் பொது நிறுவனமான திரிபோஷா நிறுவனத்தினை கலைக்கவோ அல்லது வேறு நிறுவனங்களுடன் இணைக்கவோ வேண்டாம் என சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
2024 செப்டெம்பர் 27 ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், இலங்கை திரிபோஷ நிறுவனமும் கலைக்கப்படுவதற்கு அல்லது ஏனைய நிறுவனங்களுடன் இணைக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் திரிபோஷ நிறுவனம் வருடாந்த இலாபம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக உள்ளதாகவும், 2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது திரிபோஷ நிறுவனம் 100 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் திரிபோஷ நிறுவனத்தின் இலாபத்தில் இருந்து 165 மில்லியன் ரூபா திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்,
2023 ஆம் ஆண்டு வருமான வரியாக 231 மில்லியன் ரூபா உள்நாட்டு வருமான வரி திணைக்களத்திற்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திரிபோஷா நிறுவனம் அரசாங்கத்தினால் பேணப்பட வேண்டியது எனவும், பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்துக்கான பங்களிப்பாக கருதப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.