அம்பாறை மாவட்டத்தில் , சிவில் அமைப்பினால் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன.
கடந்த ஜனாதிபதித்தேர்தலில் பொதுக்கட்டமைப்பாக செயற்பட்ட அமைப்புக்களில் ஒன்றான சிவில் அமைப்பு அம்பாறை மாவட்டத்தில் இந்த முயற்சியை தொடர்ச்சியாக முன்னெடுத்திருந்தது.
இதில் தமிழரசுக்கட்சி, ஈரோஸ் ஜனநாயகக் முன்னணி, ரெலோ, புளோட், ஈ பி ஆர் எல். எப்.. ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் தொடர்ச்சியாக பேசி வந்தனர். இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சேர்ந்து பயணிக்க முடியாது, தமது கட்சி சின்னத்தை விட்டு கொடுக்க முடியாது என ஆரம்பத்தில் தெரிவித்து விலகியிருந்தனர்.
இதனால் தொடர்ச்சியாக எனைய ஆறு கட்சிகளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன.
கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை பொது கட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் குடிசார் அமைப்பு , தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியவற்றின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இ.விக்னேஸ்வரன் , அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பு தலைவருமான கண வரதராஜன் ஆகியோர் முன்னெடுத்து வந்திருந்தனர்.
இந்த தொடர் முயற்சியின் இறுதிக்கட்ட சந்திப்பு நேற்று (07) காரைதீவில் இடம் பெற்றது. இதில் பங்குபற்றிய ஆறு கட்சிகளும் தமது நிலைப்பாட்டை இறுதியாக தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பில் குடிசார் அமைப்பின் அம்பாறை இணைப்பாளர் இ.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் பிரிந்து போட்டியிடுவதால் தமிழ் ஆசனம் இழக்கப்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப முதற்கட்டமாக தமிழ் தேசிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்திருந்தோம்.
கட்சிகளின் தலைமை மற்றும் அப்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் கட்சி பிரமுகர்களுடன் பேசியதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழரசுக்கட்சியும் வீட்டு சின்னத்தில் போட்டியிட இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் தமிழரசுக்கட்சியையும் இணைத்து சங்கு சின்னத்தில் போட்டியிட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. இதில் இன்று 07.10.2024 இடம் பெற்ற கலந்துரையாடலிலும் இணக்கம் ஏற்படவில்லை.
இன்றைய கூட்டத்தில் பங்குபற்றிய ஆறு தமிழ் கட்சிகளும் எங்களுக்கும் ஊடகங்களுக்கும் முன்னிலையில் தமது இறுதி நிலைப்பாட்டை தெரிவித்தனர்.
இருக்கும் இரண்டு நாட்களுக்குள் அம்பாறை தமிழ் மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு தங்கள் முடிவுகளில் மாற்றம் வந்தால் நன்று வரும் என நம்புகிறோம். பொது அமைப்பாக முடிந்தவரை முயற்சி செய்துள்ளோம் என்றார்.
ஆறு தமிழ் கட்சிகளின் அம்பாறை மாவட்ட பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில்,
தமிழரசுக்கட்சி வீட்டுச் சின்னத்தில் அம்பாறையில் போட்டியிடுவது தங்களின் முடிவு எனவும், இந்த சின்னத்தின் கீழ் ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளை இணைத்து போட்டியிட தயார் ஆனால் தமது கட்சி சின்னத்தை விட்டுக் கொடுக்க முடியாது.
சங்கு சின்னம் ஆரம்பத்தில் பொது கட்டமைப்பின் கீழ் பொதுவாக இருந்தாலும், அது தற்போது குறிப்பிட்ட கட்சிகளால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் சங்கு சின்னத்தில் போட்டியிட முடியாது என தெரிவித்து வீட்டு சின்னத்தில் தனித்து போட்டியிடுவதாக அம்பாறை மாவட்ட கட்சியின் பிரமுகர்கள் தெரிவித்தனர்.
ஏனைய ஐந்து கட்சிகளும், தாங்கள் முடிந்தவரை விட்டுக்கொடுப்பை செய்துள்ளோம். அம்பாறை ,திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கக் கூடாது என்பதற்காக விட்டுக் கொடுப்புடன் பொறுமையாக செயற்பட்டுள்ளோம்.
திருகோணமலையில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட இணங்கிணோம். அம்பாறையில் சங்கு சின்னத்தில் போட்டியிட நாங்கள் ஐந்து கட்சிகள் தயார். தமிழரசுக்கட்சியை அழைத்திருந்தோம் இன்று (07) வரை நல்ல முடிவுக்காக காத்திருந்தோம். தமிழ் அரசுக் கட்சி தமது வீட்டுச் சின்னத்தில்தான் அம்பாறையில் போட்டியிட வேண்டும் என்று எங்களை அழைத்தார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாது .
நாங்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டும் அவர்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வில்லை. நாங்கள் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். ஆகவே இனி நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை எடுத்துள்ளோம் சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். மக்கள் வாக்குகளால் உங்கள் முடிவை வழங்குகங்கள் என்றனர்.