பொலிசாருக்கு கிடைத்த பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த பாடசாலை மாணவியின் மரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ள பொலிசார், அதே போல் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்த இரு பாடசாலை மாணவிகளின் மரணதிற்கும், அவரது மரணதிற்கும் இடையே தொடர்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணையில், கடந்த ஜூலை மாதம் கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடுக்குமாடித் தொகுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவர்கள் இருவரும் தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து உயிரிழந்த மாணவியின் நெருங்கிய நண்பர்கள் என தெரியவந்துள்ளது. இதனால் குறித்த பாடசாலை மாணவியும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகம் எழுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது உண்மையா, பொய்யா என சரிபார்க்க மாணவியின் பெற்றோரிடமும் பொலிசார் விசாரணை நடத்தினர். சம்பவத்தின் பின்னர் உயிரிழந்த மாணவியின் தந்தையும் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
உயிரிழந்த பாடசாலை மாணவி கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடையவர். கொழும்பில் உள்ள பிரபல சர்வதேச பாடசாலை ஒன்றில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்று வருகிறாள். சம்பவத்தன்று மாணவி பாடசாலைக்கு சென்றுவிட்டு பாடசாலை முடிந்து தாமரை கோபுரத்திற்கு வந்துள்ளார். பாடசாலை சீருடை புத்தகப் பையில் வைத்துவிட்டு வேறு உடை அணிந்துள்ளார்.
தாமரை கோபுரத்தின் பார்வையாளர் பகுதியில் பாடசாலை சீருடை அடங்கிய பையை பொலிசார் கண்டெடுத்ததில் இது உறுதியானது. அதன்படி, கண்காணிப்பு மையத்தில் இருந்து தாமரை கோபுரத்தில் இருந்து கீழே குதித்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
தாமரை கோபுரத்தின் 28வது மாடியில் கண்காணிப்பு தளம் அமைந்துள்ளது. தாமரை கோபுரத்திற்குள் தனியே நுழைந்திருக்கிறாள்.
உள்ளே நுழைய டிக்கெட்டும் வாங்கி உள்ளாள். தாமரை கோபுரத்தின் உள்ளே சென்று காலணிகளை கழற்றி விட்டு, அந்த கட்டையின் மீது ஏறி தரையில் குதித்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். அதிகாரிகளால் அவளுடைய காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது கண்காணிப்பு தளத்தில் மேலும் சிலர் இருந்துள்ளனர்.
பாதுகாப்பு அதிகாரிகளும் உடனிருந்துள்ளனர். ஆனால் அவர்களது கவனம் திசைதிருப்பிய நேரம் அவர் கீழே குதித்துள்ளார்.
எனினும் சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள் தாமரை கோபுர வளாகத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அப்போது, மூன்றாவது மாடியின் கான்கிரீட் தளத்தில் அவரது உடல் கிடந்தது. அதன்படி, 28வது மாடியில் இருந்து தப்பித்து 3வது மாடியில் தவறி விழுந்து இறந்ததாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கிய அதிகாரிகளுக்கு சில சந்தேகங்கள் எழுந்தன. அவள் குதித்தாளா அல்லது விழுந்தாளா என்பதுதான். ஆனால் தாமரை கோபுரத்தில் இருந்து கீழே குதித்தது பல சான்றுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
காலணிகளை கழற்றியதாலும், புத்தகப்பை, மொபைல் போன் தரையில் இருந்ததாலும் தாமரை கோபுரத்தில் இருந்து குதித்திருக்கலாம் என பொலிசார் கருதிய நிலையில், அவர் தரையில் குதித்திருக்கலாம் என மேலும் உறுதி செய்யப்பட்டது. அவர் ஒருவித மன அழுத்தத்தில் இருந்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. கொம்பனி வீதியில் உள்ள அல்டேர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தரையில் குதித்த தோழியும், அவரது பாடசாலையில் படித்த சக மாணவியுமான நாள் முதல் அவர் இத்தகைய மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவர்களது மரணமும், அவளது மரணமும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருப்பதை பொலிசார் அவதானித்துள்ளனர்.
விசாரணை நடத்திய பொலிசார் சி.சி.டி.வி. கேமராக்களும் கண்காணிக்கப்பட்டன.
இதனிடையே அவரது பையில் இருந்த செல்போன் குறித்து பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சம்பவத்தன்று போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அந்த போன் தொடர்பான அலசல் அறிக்கையை பெறும் பணியில் பொலிசார் ஈடுபட்டு வருவதாகவும், அதன்படி மாணவி இறப்பதற்கு முன் செய்த அழைப்புகள், அவரது போனுக்கு வந்த அழைப்புகள் போன்றவையும் கண்காணிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ராத்யா குணசேகர என்ற இந்த பாடசாலை மாணவியும் 3 மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவியும் சர்வதேச பாடசாலையில் ஒரே வகுப்பில் நெருங்கிய நண்பர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நேற்றைய தினம் நடைபெறவிருந்த நிலையில், அவரது தற்கொலைக்கான காரணங்களை கண்டறிய சர்வதேச பாடசாலையின் அதிபர் மற்றும் அவரது பாடசாலை ஆசிரியர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொழும்பு மத்திய பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் அபேசிறி குணவர்தன ஆகியோரின் ஆலோசனையின் பேரில், மருதானை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அழகொடுவ தலைமையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.