இம்முறை பொது தேர்தலில் போட்டியிடுவதற்காக வியாழேந்திரன் என அழைக்கப்படும் அமலினால் சமர்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை அனைவருக்கும் தெரிந்த விடயமே.
இந்த நிராகரிப்பு தொடர்பாக பல்வேறு வகையான விமர்சனங்களும் பல்வேறு வகையான கிண்டல்களும் கேலிகளும் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. ஆனால் இந்த நிராகரிப்பு என்பது ஒரு திட்டமிடப்பட்ட செயலாக தான் இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகின்ற இன்னொரு பக்கமும் இருக்கின்றது.
அதாவது வியாழேந்திரன் இம்முறை தேர்தலில் போட்டியிட்டாலும் அவரால் வெற்றி பெற முடியாது என்கின்ற விடயம் அவருக்கு தெரியும் என்பதனாலும் தேர்தலில் போட்டியிட்டு தோற்றால் அது அவருக்கு அவமானம் என்கின்ற நிலைமை அவருக்கு இருக்கின்றது.
அதே சமயம் போட்டியிடாமல் இருந்தால் அதுவும் ஒரு அவமானமாக கருதப்படும் என்கின்ற படியால் எப்படியாவது வேட்புமனுக்களை முறையில்லாமல் சமர்ப்பித்து அவை நிராகரிக்கப்படுகின்ற பட்சத்தில் அந்த நிராகரிப்பை அடிப்படையாக வைத்து கொண்டு தான் போட்டியிலிருந்து ஒதுங்கலாம் என்று அவரே திட்டமிட்டு நிராகரிப்புக்கு உள்ளாகின்ற விதத்தில் ஆவணங்களை சமர்ப்பித்தார் என்ற ஒரு கதையும் ஒன்று பரவி வருகின்றது. அது எப்படி இருந்தாலும் அவரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு அவர் இந்த பொது தேர்தல் அரசியலில் இருந்து அகற்றப்பட்டு இருக்கின்றார்.
ஆனால் அண்மையில் அவருடைய முகநூல் பக்கத்திலே அவரது கழக உறுப்பினர்களுக்கு ஒரு விடயத்தை பதிவிட்டு இருக்கின்றார். அதில் ‘யார் என்ன பேசினாலும் நீங்கள் அமைதியாக இருங்கள். சொல்பவர் சொல்லிக்கொண்டே போகட்டும்.
என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். எல்லோருக்கும் பதிலடி கொடுக்கின்ற விதத்திலே நாங்களும் வெளிவருவோம். அப்போது தெரியும் நாங்கள் யார் என்பது பற்றி’ எனும் அர்த்தத்திலே தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார்.
இந்த விடயத்தை பார்க்கும் போது இதனூடாக அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பது பற்றி ஆராய வேண்டி இருக்கின்றது.
முதலாவது அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட முடியாமல் போன படியால் அவர் யாராவது ஒருவருக்கு ஆதரவு வழங்க வேண்டிய ஒரு நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார். ஏன் என்றால் இன்னொருவருக்கு ஆதரவு வழங்கும் போது அவர் ஆதரவு கொடுக்கின்ற கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றி அடைகின்ற பட்சத்தில் தானும் அந்த வெற்றியிலே பங்கு கொண்டு அடுத்த கட்ட அரசியலில் ஈடுபடலாம் என்ற ஒரு எண்ணம் அவருக்கு இருக்கின்றது.
அதே சமயம் அவருடைய காலத்திலேயே நடந்த ஊழல் குற்றச்சாட்டுகள் மோசடிகள் பற்றிய விசாரணைகள் வருகின்ற போது தனக்கொரு பாதுகாப்பு தேவை என்பதற்காக அவர் பெரும்பாலும் பிள்ளையானுக்கு ஆதரவு வழங்கலாம் என்ற ஒரு கருத்து தெரிவிக்கப்படுகின்றது.
ஏன் என்றால் பிள்ளையானும் வியாழேந்திரனும் ஒரே வகையான மோசடிகள் அல்லது அரசியல் அநாகரீகங்களிலே ஈடுபட்டிருக்கின்ற படியால் இவர்கள் இருவர் மேலேயும் சில சமயம் விசாரணைகள் முடுக்கிவிடபடலாம் என்ற காரணத்தினால் இருவரும் ஒன்று சேர்ந்து அநுரவுக்கு ஆதரவளிப்பதன் ஊடாக தங்களை காப்பாற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கின்றார்கள்.
ஏன் என்றால் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் பிள்ளையானின் கட்சியை சேர்ந்த தலைமை வேட்பாளர் ஒருவர் அம்பாறையில் சொல்லி இருக்கின்றார். ‘நாங்கள் எப்படியாவது அனுரவுடன் சேர்ந்து ஆட்சியமைப்போம். அனுரவுக்கு துணையாக இருப்போம், தேசியம் என்பது எங்களுக்கு முக்கியம் இல்லை என்று பகிரங்கமாக சொல்லி இருக்கின்றார்.
இந்த செய்தி எதை சொல்கின்றது என்றால், அவர்கள் அனுரவுடன் சேருகின்றார்கள் என்பதையே காட்டி நிற்கின்றது இதன் பின்னணியில் அவர்கள் தங்களை காப்பாற்றி கொள்வதற்காக அனுரவுடன் சேரும் ஒரு முடிவுக்கு வந்து இருக்கின்றார்கள் என்று எண்ண தோன்றுகின்றது. இப்படியான பின்னணியில் வியாழேந்திரன் பிள்ளையானுக்கு ஆதரவளிப்பதன் மூலம் தானும் பாதுகாப்பு பெறலாம் என்ற அடிப்படையிலே அவர்களுடைய செயற்பாடுகள் இந்த பொது தேர்தல் காலத்திலே இருக்கலாம் என்று ஊகிப்பதற்கு இடம் இருக்கின்றது. இவை அனைத்துமே தங்களை காப்பாற்றி கொள்வதற்காக இவர்கள் செய்கின்ற செயற்பாடுகளின் ஒரு அங்கம் என்பது தெட்டதெளிவாக தெரிகின்றது.
ஆனாலும் அனுர குமார திஸாநாயகவின் உடைய அண்மைக்கால செய்திகள், அவர் சொல்கின்ற விடயங்கள் குறிப்பாக ஈஸ்டர் குண்டு தாக்குதலில் சம்பந்தபட்டவர்களை எவ்விதத்திலும் தாங்கள் விட போவதில்லை என்பது போன்ற பேச்சுக்களை பார்க்கின்ற பொழுது நிலைமை என்னவாகும் என்பதை பற்றி யாருமே ஊகிக்க முடியாத நிலைமை ஒன்று தான் காணப்படுகின்றது. ஆனாலும் முன் ஏற்பாடாக வியாழேந்திரன் பிள்ளையானுக்கு ஆதரவளிக்க முடிவு எடுத்திருப்பது ஒரு அளவுக்கு உறுதியான செய்தியாக காணப்படுகின்றது.