நாட்டு மக்களின் நலன்கருதி அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அகில இலங்கை அத்தியாவசிய மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளினது சங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும், இவ்வாறு கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்க முடியா விட்டால் அரிசி விற்பனையை புறக் கணிக்க சங்கம் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் இன்னும் சில தினங்களில் சங்கம் ஊடக சந்திப்பின் மூலம் இதனை அறிவிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை அத்தியாவசிய மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளினது சங்கம், மாவட்ட ரீதியாக வர்த்தக சங்க கிளைகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ் முதலாவதாகக் கண்டி மாவட்ட அத்தியாவசிய மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளினது சங்க கிளை அங்குரார்ப்பண கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அதன் தலைவர் டபிள்யூ எம்.நாஜிம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தின் சிங்கள, தமிழ், முஸ்லீம் வர்த்தகர்களை உள்ளடக்கிய சங்க அங்குரார்ப்பண கூட்டம் கடந்த (13ஆம் திகதி) மடவளை மதினா தேசிய பாடசாலை அஷ்ரப் மண்டபத்தில் நடைபெற்றன.
தொடர்ந்துரையாற்றி தலைவர், பலவகையான அரசி வகையில் பல்வேறுபட்ட கட்டுப்பாடு விலைகள் காணப்படுகின்றன , அந்த வகையில் நாம் உதாரணத்திற்கு நாட்டரசியை எடுத்துக்கொண்டால் அரிசிக்கு 220 ரூபா கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த விலைக்கு விற்கக்கூடிய விலையில் வியாபாரிகளுக்கு அரிசி கிடைப்பதில்லை. அதுபோன்று அரிசி வகைகள் மட்டுமன்றி பல அத்தியாவசிய பொருட்களுக்கான நிலைமைகளும் இவ்வாறானநிலையே காணப்படுகின்றன.
சில வரத்தகர்கள் 230 ரூபாவுக்கு அரிசியை பெற்று 235 அல்லது 240 ரூபாய்க்கு விற்பனை செய்தால், அதிக விலைக்கு விற்பனை செய்ததாக நுகர்வோர் அதிகார சபையினர் அவர்களைக் கைது செய்து அவர்களைக் கறுப்பு வியாபாரிகள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவே, இந்த அரிசி விற்பனை தொடர்பில் வர்த்தகர்களை பாதிக்காதவகையிலும் நுகர்வோர்களுக்கு பாரமில்லாததுமான வகையில் முறையான நியாயமொன்றை மேற்கொள்ள சம்பந்தப்பட்டவர்களுடன் நாம் கலந்துரையாடவுள்ளோம் இதுதொடர்பில் ஊடகசந்திப்பொன்றை நடத்தவும் சங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் விளக்கங்களை உரிய அதிகாரிகளைக் கொண்டு மீண்டும் வர்த்தகர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படும் அதுபோல் வர்த்தகர் எதிர்நோக்கும் பல அடிப்படை பிரச்சனைகள் குறித்தும் உரிய மட்டத்தில் பேசி தீர்வினை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தக சமுகத்திற்கு விடுமுறை இல்லை, ஓய்வூதியமில்லை ஏனையோருக்குக் கிடைக்கின்ற அரச சலுகைகள் வியாபார சமூகத்திற்கு கிடைப்பதில்லை நாட்டின் பொளருளாதார விருத்திற்கு வியாபாரிகளின் வரி இன்றிமையாதொன்றாகும். பல்வேறுதேவைகள் நிமித்தம் அதிகமான வர்த்தக நிலையங்களுக்குத் தனியாகவும் மற்றும் அமைப்புகள் ரீதியாகவும் வருகின்றனர் அவர்களுக்கும் எம்மால் முடிந்த உதவிகளை புரியவேண்டியுள்ளது.
மேலும் வர்த்தகர்களான நாங்கள் இயந்திரமாகவே தமது வாழ்க்கையை முன்னெடுக்கின்றோம். அவ்வாறு இருந்த போதிலும் சமூக சேவையின் பொருட்டு நாட்டுக்கும் மக்களுக்கும் வியாபாரிகள் பல்வேறு வகையில் பங்களிப்பு செய்வதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது, ஆகவே. வர்த்தகர்கள் முன்னோக்குகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தேவைப்படுகின்றன. அவர்கள் சுதந்திரமாக வியாபாரம் செய்யக்கூடிய உரிய சூழல்களை ஏற்படுத்தவும் சங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றனது.
அதேசமயம் அகில இலங்கை மற்றும் கண்டி மாவட்ட அத்தியாவசிய மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளினது சங்கம் பொது செயலாளர், தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட பலரும் இங்கு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.