நடைபெறப்போகின்ற பொது தேர்தலில் போட்டியிடப்போகின்ற கட்சிகளுக்கு இடையில் தற்பொழுதே தனிப்பட்ட போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.
இவர்கள் தங்களுக்குரிய விருப்பு வாக்குகளை நோக்கியே தங்களுடைய பிரச்சாரத்தை மேற்கொள்ளுகின்றார்களே தவிர கொள்கைக்காகவோ, கட்சிக்காகவோ அவர்கள் எதையும்
செய்ததாக தெரியவில்லை.
கொள்கை மற்றும் கட்சி என்பனவெல்லாம் அவர்களை பொறுத்தவரையில் இந்த தேர்தலில் பாவிக்கப்படுகின்ற ஒரு விடயமாக மாறிவிட்டதே தவிர மற்றும் படி அவர்கள் தங்களுடைய சொந்த வெற்றிக்காக பாடுபடுவதாகவே தெரிகின்றது.
இது தொடர்பாக திருகோணமலை மாவட்டத்திலே தமிழரசு கட்சியில் போட்டியிடுகின்ற ஆரியபால ஜதீந்திரா என்ற வேட்பாளர் பின்வரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
“ஒரு அறிமுகக் கூட்டம் கூட உங்களால் நடத்த முடியவில்லையா ஏனெனில் வாக்களிக்கவுள்ள மக்களுக்கு யாரெல்லாம் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள் என்று கூட தெரியவில்லையே”. இப்படியாக பலரும் என்னைக் கேட்கின்றார்கள். இது பற்றி சம்பந்தப்பட்டவர்களுடன் பேசிப் பார்த்தேன் ஒரு அறிமுகக் கூட்டத்தை ஏற்பாடு செய்யுங்கள், கட்சிகளின் தலைவர்கள் தேவையில்லை நாங்களே செய்வோம் என்றும் ஆலோசனை கூறியிருந்தேன் ஆனால் நடக்கவில்லை.
இது வரையில் ஏழு வேட்பாளர்களும் ஒரே மேடையில் மக்கள் முன்னால் தோன்றவில்லை. ஒவ்வொருவரும் தங்களின் விருப்பு வாக்குகளுக்காக வேலை செய்கின்றனர். நான் இதுவரையில் எந்தவொரு பிரச்சார நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இப்போதுதான் ஒரு துண்டுப் பிரசுரத்தை தயார் செய்து கொண்டிருக்கின்றேன்.
திருகோணமலையின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும் என்னும் ஒரேயொரு நோக்கத்திற்காகவே நாம் ஒன்றாக நிற்கின்றோம். பிரதிநித்துத்தை பாதுகாப்பதற்கு முதலில் கட்சி வெல்ல வேண்டும் அதன் பின்னர்தான் வேட்பாளர்களின் விருப்பு வாக்கிற்கு பெறுமதியிருக்கும். நிலைமையை உற்று நோக்கினால் ஒரு ஆசனம் வருவது கூட கேள்விக்குறியாகவே தெரிகின்றது. என்ன நோக்கத்திற்காக நாம் ஒன்றுபட்டோமோ, அந்த நோக்கம் நிறைவேறும் போல் தெரியவில்லை.
தமிழ் பிரதிநிதித்துவத்தில் அக்கறையுள்ளவர்கள் இதனை கருத்தில் கொண்டு, முதலில் ஏழு வேட்பாளர்களையும் ஓரிடத்தில் பேசுவதற்கான ஏற்பாட்டை செய்யுங்கள். அப்போதுதானே யாருக்கு என்ன ஆற்றலுண்டு, இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள முடியும்.
மக்களை இருளில் வைத்துக் கொண்டு, தந்திரங்களால் வாக்குகளை பெறலாம் என்று நினைத்தால் அது மக்களுக்குச் செய்யும் அனியாயமாகும்.
அரசியல் தலைமைத்தும் என்பது மக்களை வழிநடத்துவதாகும் மக்களை வழிடத்துவதற்கான அங்கீகாரத்தை கோரும் போட்டியில் ஈடுபடுபவர்கள் மக்கள் முன் தோன்றி, தங்களின்
அரசியல் நிலைப்பாடுகளை கூற வேண்டும் அதுதான் ஒரு ஆரோக்கியமான அரசியல் கலாசாலாத்திற்கு வழிவகுக்கும் ஆனால் திருகோணமலையில்?” என்று தெரிவித்துள்ளார்.