நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய துருக்கி அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
துருக்கி நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பின் போதே, அந்நாட்டு ஜனாதிபதி எர்டோகன் இந்த விடயத்தை தெளிவுபடுத்தியிருந்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தனது இராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது.
தற்போது வரை நீடித்து வரும் இந்த தாக்குதல்களுக்கு உக்ரைன் இராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் செய்து வருகின்றன.
இதனிடையே உக்ரைன் இராணுவத்திற்கு மேலும் இராணுவ உதவிகளை பெற்றுக்கொள்ள அந்நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக அவர் துருக்கி சென்ற அவரை, அந்நாட்டு ஜனாதிபதி எர்டோகன் வரவேற்றார்.
இந்த சந்திப்பின்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உக்ரைன் நேட்டோ படையில் இணைய எர்டோகன் சம்மதம் தெரிவித்தார். அதோடு நேட்டோவில் இணைய உக்ரைன் தகுதியான நாடு எனவும் அவர் கூறியுள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளிடமும் துருக்கி நெருங்கிய நட்பு வைத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தராக இருக்க இந்த விடயம் உதவியாக காணப்படுகின்றது.
மேலும், சுவீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணையாமல் நடுநிலை வகித்து வந்தன. ஆனால் உக்ரைன் போரைத் தொடர்ந்து, தற்போது தங்களது நிலைப்பாட்டை அந்நாடுகள் மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.