தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன். தலைவரிடம் விடயத்தை எடுத்துக் கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதனை உருவாக்கினேன். மட்டக்களப்பில் இருந்து உருவாகிய கருதான் அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு என மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
அவரது தேர்தல் அலுவலகமொன்று நேற்று சனிக்கிழமை (19) மாலை மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட மகிழூர் கிராமத்தில் திறந்துவைத்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களிலே நான் ஒருபோதும் தேசிய கட்சிகளிலும், தேர்தல்களிலும் களமிறங்கவில்லை. அம்பாறை மாவட்டத்திலும் நான் தனி தமிழ் கட்சியிலே தான் தேர்தலில் களமிறங்கி இருந்தேன்.
இம்முறையும் நான் மட்டக்களப்பில் தேசிய ஜனநாயக முன்னணி எனும் தமிழ் கட்சியிலேதான் போட்டியிடுகிறேன். தேசிய கட்சியில் நாங்கள் தேர்தலில் களமிறங்கினால் நிச்சயமாக அதில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்குவார்கள்.
எம்முடைய வாக்குகள் அவர்களைத்தான் வெற்றிபெற வைக்கும். அதனால்தான் நாங்கள் தேசியக் கட்சிகளில் தேர்தலில் களமிறங்கவில்லை. அதனால்தான் இம்முறையும் நாங்கள் எட்டு தமிழ் வேட்பாளர்களோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறங்கி இருக்கின்றோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன். தலைவரிடம் விடயத்தை எடுத்துக் கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதனை உருவாக்கினேன்.
மட்டக்களப்பில் இருந்து உருவான கரு தான் அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதனை தலைவர் ஏற்றுக்கொண்டு கூட்டமைப்பை உருவாக்கினார்.
அக்காலத்தில் யுத்தம் நடைபெற்றபோது எமது மக்களின் இழப்புக்கள், யுத்த அழிவுகள் உலக அரங்குக்கு தெரிய வர வேண்டும். அது பாராளுமன்றத்தில் பேசப்பட வேண்டும். தமிழர்களின் குரல்கள் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
அந்தக் கடமையை ஆரம்பத்தில் அவர்கள் நன்றாக மேற்கொண்டிருந்தார்கள். அதனை நான் வரவேற்கின்றேன். சம்பந்தன் ஐயா இருக்கும்போது அது நன்றாகத்தான் செயற்பட்டது.
அவர் மரணித்ததன் பின்னர் அவர்கள் சிதறுண்டு போய்விட்டார்கள். காலப்போக்கில் அவர்கள் பணத்துக்கு அடிமையாகி பதவிகளுக்கு ஆசைப்பட்டு சிதறிப் போயுள்ளார்கள். இதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரலாறாகும்- என்றார்.