தற்காப்பு என்பது குற்றம் அல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
1987-1990 காலகட்டத்தில் பட்டலந்த சித்திரவதைக் கூடத்தில் நடந்த குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் தாக்கப்படும்போது, அதை அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது. அது கொலையாகாது என்றும், இதனை தாம் கூறவில்லை என்றும் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, இங்கு ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொண்டால், அது கொலையாகக் கருதப்படாது.

யாராவது உங்களைத் தாக்கி, நீங்கள் உங்களைத் தற்காத்துக் கொண்டால், அவர்கள் இறந்தால், அது கொலை அல்ல இது சுய பாதுகாப்பு அல்லது சிங்களத்தில், ‘ஆத்மா அரக்ஸவ’ என்று அழைக்கப்படுகிறது என்றும் வஜிர அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
பட்டலந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, அது, 210 பக்கங்களைக் கொண்ட அறிக்கையாகும். அதில்,சுமார் 150 பக்கங்கள் தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புடையவையாகும், ஐக்கிய தேசியக்கட்சியுடன் தொடர்புடையது அல்ல.
அதில் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஒரு பரிந்துரை கூட இல்லை என்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

என்னும் பட்டலந்த ஆணைக்குழுவின் வெளிப்பாடுகளின்படி, பல்வேறு குழுக்கள் கடத்தப்பட்டு, பட்டலந்த வீட்டு வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போனார்கள்.
இந்தநிலையில், வஜிர அபேவர்தன கூறிவது போன்று, இந்த நடவடிக்கைகள் உண்மையில் தற்காப்பு நடவடிக்கைகளா என்று கொழும்பின் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.