எதிர்வரும் பொதுதேர்தல் முடிவுகள் அநேகமாக எவருக்கும் அறுதி பெரும்பான்மையை தராது என்பது இப்பொழுது தெளிவாக தெரிகின்றது. இந்த நிலையில் அனுரகுமார திசாநாயக்கவினுடைய தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்க வேண்டுமானால் அவர்கள் இன்னுமொரு கட்சியுடன் இணைந்தே ஆட்சி அமைக்க வேண்டிய தேவை ஏற்படும். ஏற்கனவே சஜித் பிரேமதாசவின் கட்சியோடு இணைந்தவர்கள் ஒரு பலமான எதிர்கட்சியாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகளே பெரும்பான்மையாக காணப்படுகின்றது.
இந்நிலையில் அனுரவுக்கு தேவையான 113 ஆசனத்தை பெறுவதாயின் அவர்கள் வடக்கு கிழக்கிலே உள்ள தமிழ் கட்சிகளுடனேயே சேரவேண்டிய தேவை ஏற்படும். அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் தமிழரசு கட்சி மாத்திரமே அதற்கான தகுதியையும், திறமையையும் கொண்ட ஒரே ஒரு கட்சியாக இருப்பதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றது. எனவே தமிழரசு கட்சியே அனுரவுடன் இணைந்து ஆட்சி அமைக்குமென்றும், அவ்வாறு ஆட்சியமைக்கும் பட்சத்தில் வடகிழக்கிலுள்ள தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு, அரசியல் கைதிகளின் தீர்வு, ஏனைய தீர்வுகள் அனைத்தையும் மையப்படுத்தி அனுரவுடன் ஒப்பந்தம் செய்து அனுரவுக்கு ஆதரவு வழங்குவதற்க்கு தமிழரசு கட்சி தயாராக இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் வேட்பாளருமான இராசமாணிக்கம் சாணக்கியன் கிரானில் நடந்த பிரச்சாரக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.
இது நடைபெறுமானால் தமிழரசு கட்சி இதுவரை காலமும் கடைப்பிடித்து வந்த சிங்கள கட்சிகளுக்கு ஆதரவளிப்பதில்லை என்ற முடிவு மாற்றம் அடைவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது. இது தமிழரசு கட்சி தனது ஆரம்ப கால கொள்கையிலிருந்து விடுபட்டு சமரச அரசியல் களத்தினுள் செல்வதாக அமையும். இது தொடர்பான கலந்துரையாடல்கள் தமிழரசு கட்சிகனுள் பரவலாக இடம்பெறுகின்றதா என்பது கூட வெளிப்படையாக தெரியவில்லை.
இதே போன்றதொரு அரசியல் சூழல் மைத்திரிபால சிறிசேனவினுடைய அரசாங்கம் நல்லாட்சி என்றபேரில் இருந்த பொழுது தமிழரசு கட்சிக்கு ஏற்பட்டது. அந்த ஆட்சிக்காலத்தின் போது குறிப்பாக சுமந்திரன் போன்றோர் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களாகவே அன்றைய ஆட்சிக்காலத்தில் காணப்பட்டனர்.
பல்வேறு விடயங்களுக்கு தமிழரசு கட்சி நல்லாட்சிக்கான ஆதரவை வழங்கிருந்தும் தமிழரசு கட்சியினால் தமிழ் மக்களுடைய பிரச்சனை தொடர்பாக எந்தவொரு விடயத்தையும் செய்து முடிக்காமல் போன வரலாறும் உள்ளது. அவ்வாறு இருக்கையில் ஜேவிபியுடன் இணைவதால் மாத்திரம் எவ்வாறு பிரச்சனையை தீர்க்க முடியும் என்று தமிழரசு கட்சி நம்புகின்றது என்பது புரிந்துகொள்ள முடியாமலேயே இருக்கின்றது.
இது கூட சாணக்கியனின் தனிப்பட்ட முடிவா அல்லது கட்சியின் முடிவா என்பது கூட தெளிவில்லாது இருக்கின்றது. ஆனாலும் அவர் கூறுகின்றதன் படி அனுரவுடன் சேர்ந்து அனுரவின் ஆட்சிக்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில் தமிழரசு கட்சி பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி ஏற்படுமென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.ஏனெனில் தமிழர்களின் பிரச்சனை தொடர்பான தீர்வு விடயங்களில் ஜே.வி.பி கட்சியின் உள்ளேயே எதிரான கருத்து பரவலாக நிலவுகின்றது.
குறிப்பாக டில்வின் சில்வா, விஜித ஹேரத் மற்றும் சந்திர சேகரன் போன்றோர் மிகவும் எதிர்மறையான கருத்துக்களை கொண்டவர்களாகவே இனப்பிரச்சனை விடயத்தில் காணப்படுகின்றனர்.
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.