நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து ஒரு வேட்பாளருக்கு 10 ஆயிரம் ரூபா செலவளித்து வாக்குகளை பெறுவதற்காக இந்த 5 ஆயிரம் ரூபா கள்ள நோட்டுக்களை அச்சடிக்கின்றனர். இவர்கள் கடந்த 8 வருடத்துக்கு முன் அதிகாரத்தில் இருந்தபோது அமெரிக்க டொலர் இங்கிருந்து மாற்றப்பட்டு அது சிங்கபூரில் பிடிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. எனவே மக்கள் கவனமாக இருங்கள் என மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவரும், சுயேட்சைக்குழு பசுமாட்டு சின்னத்தின் வேட்பாளருமான க. மோகன் தெரிவித்தார்.
செங்கலடியில் உள்ள அவரது காரியாலத்தில் நேற்று செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் மேலும் தெரிவித்த அவர்,
கடந்த முறை மக்களால் நிறைய வாக்குகளை பெற்ற அரசியல் வாதிகளின் செயற்பாடுகள் இன்று இலஞ்சம், ஊழல், கொலை பட்டியலில் என நீண்டு கொண்டே செல்லுகின்றது. அதேபோல தமிழ் தேசியம் என்று கூறிக்கொண்டு எதற்காக பயணிக்கின்றனர் என்று தெரியாதுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்திலே கிட்டத்தட்ட 26 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தியை மேற்கொண்டுள்ளோம். ஊழல் அற்ற நேர்த்தியான அபிவிருத்தி கல்வி சமூகத்தை மேம்படுத்துவது, விவசாயத்தை அபிவிருத்தி செய்தல் என்பன எமது இலக்கு. அதேவேளை எங்களுக்கு நாடாளுமன்றத்தில் வாய்ப்புக்கள் கிடைக்கும் பட்சத்திலே எங்களுக்கு கிடைக்கும் ஊதியங்கள் வருமானங்களை ஏழை மாணவர்களின் கல்விக்கு பகிர்ந்தளிப்போம்.
அதேவேளை யார் ஆட்சி அமைத்தாலும் அந்த அரசாங்கத்துடன் ஆட்சியமைத்து ஒரு ஊழல் அற்ற நேர்த்தியான அபிவிருத்தியை மட்டக்களப்பு மாவட்டத்தில் கொண்டு செல்லவேண்டியது எங்கள் எதிர்பார்ப்பு.
நல்லாட்சி அரசாங்கத்தில் ரணிலுடன் நெருக்காமாக பயணித்தபோது கூட நாங்கள் திராவிடர் அமைப்பின் ஊடாக தேர்தலில் களமிறங்கினோம். தமிழர்களுடைய வாக்குகளை எடுத்து இன்னொருவரை வளர்ப்பதற்கு நாங்கள் தயார் இல்லை. அதேவேளை அனைத்து அரசியல் கட்சிகளும் முன் எச்சரிக்கையாக டம்மி சுயேட்சை குழுக்களை நிறுத்துவது வழமை. அதிகமான சுயேட்சைக்குழுக்கள் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள். தற்செயலாக வேட்பு மனு நிராகரிக்கப்படும் போது ஆயத்தமாக இந்த சுயேட்சைக்குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். எனவே வாக்குகளை பிரிப்பது தமிழ் தேசிய கட்சிகள் தான் நாங்கள் பிரிக்கவில்லை.
எனவே இந்த மக்களை குறிவைத்து கொடுப்பதற்காக அடிக்கப்பட்ட கள்ள நோட்டுக்களாக இருக்க வேண்டும் என நான் கருதுகின்றேன். மக்கள் கவனமாக 5 ஆயிரம் ரூபா நோட்டை பார்த்து வாங்குங்கள் ஏன் என்றால் அதற்குரிய குற்றவாளிகளாக நீங்கள் இருப்பீர்கள் மிக அவதானம்.
தமிழ் தேசிய கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் விரக்தியில் உள்ளனர். ஏன் என்றால் தமிழ் தேசியத்தை நேசித்தவர்கள். இன்று பிரிந்து துண்டு துண்டாக நிற்கின்றனர். அதனால் தமிழ் தேசியத்தை பாதிக்காது அபிவிருத்தி என்ற கட்டமைப்பில் ஒன்று சேர்ந்துள்ளனர். தமிழரசு கட்சிக்குள் சாணக்கியனை தேற்கடிக்க வேண்டும் என ஒரு குழு களமிங்கியுள்ளனர், மறுப்பம் ஜனாவை தோற்கடிக்க வேண்டும் என களமிறங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் மோசடியில் சம்மந்தப்பட்டவர்கள் என்பதுடன் முறையற்ற விதத்தில் பெறப்பட்ட காணிகள் அனைத்தையும் மீளப் பெறுவோம் ஏன் என்றால் தொப்புக்குஞ்சு மடுவில் கையடக்கப்படுத்தியுள்ள காணிகள் அனைத்தும் ஒரு காலத்தில் நாங்கள் மக்களை குடியேற்ற கொண்டு சென்று அது தோல்வியுற்று மாவடிஓடை கிராமம் உருவாக்கப்பட்டது. அது மக்களுடைய காணி அதற்கான பற்றுசீட்டுக்களை வைத்திருக்கின்றனர். அதனை மீளப்பெறவேண்டிய அனைத்து முயற்சிகளை செய்வோம்.
தமிழர்கள் சிங்கள தலைவர்களை நம்பவில்லை. ஆனால் சிங்கள கட்சி தலைவர்கள் தமிழ் தேசிய கட்சிகளுக்கு மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். ஒரு கட்டத்திலே ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து போட்டியிட்ட டயஸ் அழப்பெருமால் தான் தோல்வி உற்ற போது தெரிவித்தார். என்னை இரா.சம்மந்தன் நல்லவர் என்று கூறியிருந்தார். நான் வென்றதாக கருதுகின்றேன் என்றார்.
அதேவேளை ரணிலிடம் 60 கோடி ரூபாவை சாணக்கியன் ஏமாற்றி பெற்ற பின்பு அவர்கள் சொன்ன வார்த்தை ‘ஏயா கப்பட்டியா’ என்று இன்று தமிழ் தேசியத்தை சின்னா பின்னமாக்கி கொண்டிருக்கின்றனர். தங்களுடைய அதிகார பதவி வெறிக்காக கட்சிகளை பிளந்து சுக்கு நூறாக்கி தமிழ் தேசியத்தை தெருவிலே விட்டு இருக்கின்றனர். அவர்கள் நினைக்கின்றனர் தமிழ் தேசியம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமானது என்று அது தவறானது.
தமிழ் தேசியத்துக்காக மனைவியை கணவனை, குழந்தைகளை, பெற்றோர்களை இழந்தவர்கள் இன்று தெருவில் நிற்கின்றனர். ஆனால் தமிழ் தேசியத்தை வைத்து இவர்கள் விற்று பிழைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தான் உண்மையானது. சங்கு உருவானது பற்றிய உண்மையை இன்று இடம்பெறும் பிரச்சார கூட்டத்தில் பகிரங்கப்படுத்துவேன் என்றார்.