நபர் ஒருவரை பலமாக தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குடும்ப தகராறு காரணமாக பெண் ஒருவர் தனது கணவருக்கு எதிராக குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்நிலையில், குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இது தொடர்பான முறைப்பாட்டை பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர், பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தினால் இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என அந்த பெண் இந்த பொலிஸ் பரிசோதகரிடம் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, இந்த பொலிஸ் பரிசோதகர், பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு சென்று முறைப்பாடு அளித்த பெண்ணின் கணவரை பலமாக தாக்கியுள்ளார்.
இதன்போது, பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் உயர் அதிகாரிகள் சிலர் இணைந்து இந்த தாக்குதலை தடுத்து, பொலிஸ் பரிசோதகர் மீது முறைப்பாடளித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான அந்த பெண்ணின் கணவர் சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக நீதிமன்றில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்த பொலிஸ் பரிசோதகர் சுகயீன விடுமுறையை அறிவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், குளியாப்பிட்டிய பொலிஸ் பரிசோதகரை கைது செய்வது தொடர்பில் இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.