தனித்து நின்று ஜனாதிபதியுடைய கட்சியால் நின்று செயற்பட முடியாது என்ற செய்தியை எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் சொல்லியிருப்பதாக ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியாவில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எல்பிட்டிய பிரதேசசபை தேர்தல் முடிவுகள் நாட்டுக்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கின்றது. அதாவது கடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார 42 வீதமான வாக்குகளை பெற்றிருந்தார்.
அந்தவகையில் 58 வீதமான வாக்குகள் அவருக்கு எதிராக இருந்தது. ஜனாதிபதி தேர்தலின் பிறகு உடனடயாக ஒரு தேர்தல் நடக்குமாக இருந்தால் வாக்குகள் அதிகரிப்பதுவே வழமை.
ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்ற செய்தியை எல்பிட்டிய தேர்தல் நாட்டு மக்களுக்கு சொல்லியிருக்கின்றது. அந்த தேர்தல் முடிவுகளின் படி தனித்து நின்று ஜனாதிபதியுடைய கட்சியால் ஆட்சி செய்யமுடியாது என்ற செய்தியும் சொல்லப்பட்டிருக்கின்றது.
ஒவ்வொரு நாளும் வாக்குகள் குறைவடைந்து கொண்டே செல்கின்றது. எனவே தமிழ் பேசுகின்ற மக்கள் ஆழமாக சிந்தித்து இந்ததேர்தலில் தங்களது பிரசதேசங்களுக்காக பணியாற்றக்கூடிய நல்லவர்களுக்கு சந்தர்பத்தை வழங்கவேண்டும்” என்றார்.