இலங்கையின் நிலப்பரப்பு விரிவடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக நில அளவையாளர் நாயகம் W.சுதத் எல்.சி. பெரேரா தெரிவித்துள்ளார்.
கடலாக இருந்த துறைமுக நகரம் தற்போது நிலமாக மாறி, நாட்டின் எல்லைக்குள் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊடகம் ஒன்றுக்கு நேற்று (27) வழங்கிய நேர்காணலின் போது இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சொந்தமான அனைத்து நிலப்பரப்புக்களையும் உள்ளடக்கிய வகையில் புதிய வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச தரத்திற்கு அமைய இலங்கை வரைபடம் ஒன்று முதல் 50 ஆயிரம் வரையிலான அளவையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
நில அளவைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் ஆய்வுகளின் மூலம் இலங்கையின் வரைபடங்கள் இற்றைப்படுத்தப்படுகின்றன.
கடந்த காலங்களில் மஹியங்கனை வீதியின் இருபுறமும் வனப்பகுதியாக காணப்பட்டது.
எனினும் தற்போது சில பிரதேசங்கள் குடியேற்றப்பட்டு, கிராமங்களும், நகரங்களும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் புதிய வரைப்படம் தயாரிப்புக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக, நில அளவையாளர் நாயகம் சுதத் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.