அரசாங்கம் புதிதாக கடன் எதனையும் பெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,
எந்தவொரு நிறுவனத்திடமும் வெளிநாட்டுக் கடன் பெறப்படவில்லை.
பொதுவாக, மத்திய வங்கி கருவூல உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் காலாவதியாகும் போது விகிதாசார முறையில் புதியவற்றை வழங்கும் முறை உள்ளது. அந்த செயல்முறை ஒவ்வொரு நாளும் நடக்கும் ஒன்று.
மேலும், புதிய பணம் எதுவும் அச்சிடப்படவில்லை. பணம் அச்சிடப்பட்டிருந்தால், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, நிதியமைச்சர் எனும் ரீதியில் நாணயத்தாள்களில் கையொப்பமிட்டிருக்க வேண்டும்.
ரூ.1 பில்லியன் நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டன என்ற செய்தி பொய்யானது என அவர் கூறினார்.
மேலும், இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்ட தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு நிறுவனம் சில தகவல்களை இலங்கை புலனாய்வு நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இந்த புலனாய்வு அமைப்புகள் நாட்டில் செல்வாக்கு செலுத்தவில்லை எனவும், அறுகம்பே பகுதிக்கு விஜயம் செய்வதில் அவதானமாக இருக்குமாறு அமெரிக்கா அறிவித்தல் விடுத்திருந்த போதிலும், அவ்வாறு இல்லாமல் பயணத்தடை விதிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டது.
அதேசமயம் இலங்கை மத்திய வங்கி கிட்டத்தட்ட நூறு பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏலத்தின் மூலம் 36.1 பில்லியன் ரூபாயும் அச்சிடப்பட்ட நாணயத்தின் பிரீமியம் ஏலத்தின் மூலம் ஏழு நாட்களில் 70 பில்லியன் ரூபாயும் திரட்டப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கைகளின்படி, பல பணப்புழக்க கருவிகள் மூலம் உள்ளூர் சொத்துக்களுக்காக கிட்டத்தட்ட நூற்று ஆறு பில்லியன் ரூபாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் வங்கி அமைப்பில் சேர்க்கப்படும் மேலதிக பணம் 190 பில்லியன் ரூபாய்களாக உயர்கிறது. இது மத்திய வங்கியின் வழமையான திறந்த சந்தை செயற்பாடுகளுடன் ஒத்துப்போவதோடு அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடுசெய்யாது.
மத்திய வங்கிச் சட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு உரிய பணத்தை அரசாங்கம் அச்சிட முடியாது எனவும் தெரிவித்து மேற்கண்டவாறு செய்தியொன்று தற்போது பரப்பப்பட்டு வந்ததை அடுத்ததே விஜித ஹேரத் இந்த விடயம் தொடர்ப்பில் விளக்கம் அளித்துள்ளார்.