அனைத்து விடயங்களுக்கும் சர்வதேசம் தலையிட வேண்டும் என்று கூறாதீர்கள். சர்வதேச நாடுகளுக்கும் சில வரையறைகள் உண்டு என்று தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களிடம் இலங்கைக்கான தூதுவர் ஜூலிசங் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் நடை பெற்ற தமிழ்த் தேசிய கட்சிகளுடனான சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் எம். பியுமான சி. வி. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் எம். பியுமானகஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரெலோவின் தலைவரும் எம். பியுமான செல்வம் அடைக்கலநாதன், புளொட் டின் தலைவரும் எம். பியுமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழரசு கட்சியின்
பேச்சாளரும் எம். பியுமான எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் பங்குபற்றினர்.
இதன்போது, ரணில் விக்கிரமசிங்க பிரச்னைக்கு தீர்வு தருவார் என்று தாம் நம்பவில்லை என்றும் அவர் ஜனாதிபதியான பின்னர் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை எனவும்
தமிழ்த் தரப்பினர் தூதுவருக்கு சுட்டிக்காட்டினர்.
அத்துடன், இனப் பிரச்னைக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வே தேவையானது. எவ்வாறாயினும், தற்
போது கிடைத்துள்ள அதிகாரம் அற்றுப்போகக் கூடாது என்பதற்காக 13ஆவது அரசமைப்பு திருத்தத்தை
நடைமுறைப்படுத்த வேண்டும் – என்று தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், குருந்தூர்மலை விவகாரம், தமிழரின் காணி அபகரிப்பு தொடர்பான பிரச்னைகளில் இலங்கைமீது
சர்வதேச சமூகம் பிரயோகித்த அழுத்தம் போதாது என்று தமிழ்த் தரப்பினர் கூறினர்.
இதன்போது, அமெரிக்க தூதுவர், அனைத்து விடயங்களுக்கும் சர்வதேசம் தலையிட வேண்டும் என்று கூறாதீர்கள்.
சர்வதேச நாடுகளுக்கும் சில வரையறைகள் உண்டு என்ற சாரப்பட கூறினார்.இதேவேளை, இந்த சந்திப்பில் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. உண்மை, நல்லிணக்கம், நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை முயற்சி எடுத்துள்ள
நிலையில், அதிகாரப்பகிர்வு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும்காணிப் பிரச்னை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்னை, மனிதப் புதைகுழி தொடர்பில் விசாரணை முன்னெடுத்தல் உள்ளிட்ட விடயங்களின் முக்கியத்துவம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.