அம்பாறை மாவட்டத்தின் சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் பலத்த மழை காரணமாக தாழ் நில பிரதேசங்களில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது.
சில நாட்கள் முன் ஆரம்பித்த பலத்த மழை இன்றும் தொடரும் நிலையில் மேலும் வெள்ளம் அதிகரிப்பதற்கான சாத்தியகூறுகள் அதிகமாக காணப்படுகின்றது.
ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று. அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்தவில், கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் இவ்வாறு மழை பெய்து வருகின்றது.
இதனால் மக்களது போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காட்டுப்பாலத்தின் கீழாக சல்வீனியா தாவரம் சூழ்ந்துள்ள நிலையில் நீர் வழிந்தோடுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
சல்வீனியா சூழ்ந்துள்ள பகுதியில் கால்நடைகள் சிக்குண்டு உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வெள்ளநீர் வழிந்தோடும் பிரதான கழிமுகப்பிரதேசமான சின்னமுகத்துவாரத்தின் ஊடாக வெள்ள நீரை வாழ்ந்தோடுவதனால்
அந்த பகுதியில் வெள்ள அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சில தனவந்தர்கள் முன்வந்து சமைத்த உணவை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலுக்கு செல்வதை மீனவர்கள் தவிர்த்துள்ள நிலையில் நன்னீர் மீன்பிடியில், கிராமத்திற்குள்ளேயே மீனவர்கள் முன்னெடுத்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
இதேநேரம் குறிப்பிடத்தக்களவு இடப்பெயர்வுகள் இடம்பெறாதபோதும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களின் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளதுடன், பாதிப்பு தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உதவியோடு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.