இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பதிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களுக்கு கடவுச்சீட்டு மற்றும் விசா தொடர்பான விதிமுறைகளில் இந்திய அரசாங்கம் தளர்வுகளை அறிவித்துள்ளது.
இந்திய உள்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான குடிவரவு மற்றும் வெளிநாட்டவர் (விலக்கு) திருத்த உத்தரவின் மூலம் இந்தச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இந்தியாவில் தஞ்சமடைந்து, அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு வழக்கமான கடவுச்சீட்டு மற்றும் விசா தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 1959ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு மே 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நேபாளத்தின் காத்மாண்டுவிலுள்ள இந்தியத் தூதரகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் மூலம் இந்தியாவிற்குள் நுழைந்த சில திபெத்தியர்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா – நேபாள எல்லையிலுள்ள குறிப்பிட்ட குடிவரவு சோதனைச் சாவடிகள் ஊடாக விசேட அனுமதிப் பத்திரங்களுடன் இந்தியாவிற்குள் நுழைந்த திபெத்தியர்களும் இவ்விலக்கில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 2009ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இந்தியாவிற்குள் நுழைந்த குறிப்பிட்ட பாகிஸ்தானியர்கள், மதத் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டு ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஆறு மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட ஏனைய சில பிரிவினருக்கும் நிபந்தனைகளுடன் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தத்தின் மூலம் இந்தியாவில் வசிக்கும் குறிப்பிட்ட வெளிநாட்டவர்களின் குடியிருப்பு மற்றும் ஆவணங்கள் தொடர்பான நடைமுறைகளை எளிதாக்குவதே நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








