அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை “உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதி” என விமர்சித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் டிரம்புக்கு மக்கள் வழங்கிய பதிலடி எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (05) பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் மற்றும் அறக்கட்டளைகள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
டிரம்ப் போர்களில் ஈடுபடமாட்டேன் என வழங்கிய வாக்குறுதியை மீறியுள்ளதுடன், குடியேற்றவாசிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையும் கொண்டுள்ளதாக ஹக்கீம் குற்றஞ்சாட்டினார்.
அமெரிக்கத் தேர்தலில் குடியேற்றப் பின்னணியைக் கொண்ட பலர் பிரதிநிதிகள் சபை, செனட் மற்றும் ஆளுநர் பதவிகளுக்குத் தெரிவாகியிருப்பது டிரம்புக்கு அமெரிக்க மக்கள் வழங்கிய பதிலடி என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், லெபனான் மற்றும் பாலஸ்தீனத்தில் இடம்பெறும் போர்களை நிறுத்துவதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
உலகில் அழிவையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலிருந்து அமெரிக்கா விலக வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், டிரம்புக்கு அரசியல் பின்னடைவை ஏற்படுத்திய அமெரிக்க மக்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.







