மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் வந்திருந்தமை அனைவருக்கும் தெரிந்த ஒருவிடயம்.
அந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு குற்றச்சாட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கீழ் காணும் பதிவை முகநூல் நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்படுவதாவது,
யாராச்சும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைய காப்பாத்துங்கப்பா…..!!!
சம்பவம் 1.
எனக்கு நீண்ட நாள் இடுப்பு வலி.ஒவ்வொரு வைத்தியசாலையாக மருந்தெடுத்தேன்.மாற்றமேதுமில்லை.வலி கூடியதே ஒழிய குறைந்தபாடில்லை.
எலும்பு நிபுணர்,பொது நிபுணர்,மூட்டு நிபுணர்,நரம்பு நிபுணர் என சகலதரப்பட்ட நிபுணர்களையும் தனியார் வைத்தியசாலைகளுக்கு எடுப்பித்து காண்பித்தும் பார்த்தேன்.
பணமும், என் பொழுதுகளும் தனியார் வைத்தியசாலைகளில் கரைந்து போனதே ஒழிய வலி சிறிதும் கரையவில்லை.
இறுதியில் நரம்புக்கான சத்திரசிகிச்சை நிபுணரை தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு எடுப்பித்து காண்பித்தேன்.அவர் என்னை போதனா வைத்தியசாலைக்கு அழைத்து, யாழ்ப்பாணத்திற்கு என்னை அம்பியுலன்ஸ் வண்டியில் அனுப்பி MRI scanning செய்து பார்த்தார்.
அந்த பரிசோதனையில் எனது இடுப்பு எலும்பு குழாயினூடாக செல்லும் நரம்புகளை இடுப்பு எலும்புகள் நெருக்குகின்றனவாம்.அதனால்தான் எனக்கு நீங்காத இடுப்பு வலி ஏற்படுகிறதாம் என்று அவர் கண்டறிந்தார்.அதனை சத்திரசிகிச்சை மூலம் சுகப்படுத்த முயற்சிக்கலாம் என கூறி சத்திர சிகிச்சை செய்ய நாளொன்றும் தந்தார்.
உரிய காலத்தில் வைத்தியசாலையில் சேர்ந்து, சத்திர சிகிச்சை கூடத்திற்கு சென்றேன்.அங்கு நிபுணர் அடங்கலான வைத்திய குழுவினர் யாவரும் சத்திர சிகிச்சை கூடத்திற்கு வருகை தந்திருந்தும் எனக்கான சிகிச்சை தொடங்கப்படவில்லை.
கனநேர காத்திருப்புக்கு பின் எனது வைத்திய நிபுணரை அணுகி ஏன் எனக்கான சிகிச்சை தொடங்கப்படவில்லை? என கேட்டேன்.
எனக்கான சிகிச்சையை செய்வதற்கு C arm எனப்படும் கதிரியக்க உபகரணம் தேவையாம்.அந்த உபகரணத்தை தற்போது எலும்பு முறிவு வைத்திய நிபுணர் பயன்படுத்தி கொண்டிருக்கிறாராம்.அவரது வேலை முடிந்த பின்புதான் எனக்கான சிகிச்சை தொடங்கப்படுமாம் என கூறினார்.
நீண்ட நேரமாக இருந்தமையால் உண்டாகிய இடுப்பு வலி,உணவு தவிர்த்து சத்திரசிகிச்சைக்காக தயாராகி, நீண்ட நேரம் உணவு,நீர் என்பன தவிர்த்தமையால் உண்டான பசி,வாட்டம்,தாகம் என்பவற்றை பொறுத்துக்கொண்டு காத்திருந்தேன்.
பிற்பகல் ஆகியும் சிகிச்சை செய்யப்படவில்லை.இறுதியில் C arm கிடைக்காமையால் சத்திர சிகிச்சை செய்ய முடியவில்லை என்பதுடன் சத்திர சிகிச்சை கூடத்தில் சிகிச்சை செய்வதற்கு தனக்கு வழங்கப்பட்ட நாள் முடிவடைந்துவிட்டதாகவும்,அடுத்த நாளொன்றில் சிகிச்சை செய்வதாகவும் கூறி என்னை வீட்டுக்கு அனுப்பி வைத்தார் அந்த நிபுணர்.
ஆனால் அடுத்த வாரம்கூட எனக்கான சத்திர சிகிச்சை செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறி சிகிச்சைகள் பிற்போடப்பட்டது.
நோயினால் வருந்திய நான், நரம்புக்கான சத்திர சிகிச்சை நிபுணரை அணுகி,தனியார் வைத்தியசாலை ஒன்றில் எனக்கான சத்திரசிகிச்சையை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தேன்.
ஆனால் அந்த நிபுணர், மட்டக்களப்பில் உள்ள எந்தவொரு தனியார் மருத்துவ மனைகளிலும் சத்திர சிகிச்சை செய்ய முடியாதென்று மறுத்துவிட்டார்.
மட்டக்களப்பில் உள்ள தனியார் மருத்துவ மனை சத்திர சிகிச்சை கூடங்கள் சாதாரண சிகிச்சைகளை வழங்குவதற்கு மாத்திரம் தகுதியானது என்பதும், அங்குள்ள ஆளணியானது மிக நுட்பமான சத்திரசிகிச்சைகளை பாராரிக்கும் தரம் வாய்ந்தது இல்லை என்பதும் அவருடைய மறுதலிப்பில் மறைந்து கிடந்தது.
எனக்கு மறுக்கப்பட்ட இலவச மருத்துவத்தில் என்ன குறைபாடு உளளது என்பதை ஆராய முயற்சித்தபோதுதான் எனக்கு பின்வரும் உண்மை வெளிச்சமாகியது.
அதாவது மட்டக்களப்பில் உள்ள பிரதான தனியார் வைத்தியசாலை ஒன்று, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பலதரப்பட்ட மருத்துவ நிபுணர்களுக்கு சொந்தமானது.
அது தற்போது எதிர்பார்த்த இலாபத்தை அடையாது இயங்குவதால் அந்த வைத்தியசாலையின் வருவாயை அதிகரிக்கவேண்டிய தேவை அந்த நிபுணர்களுக்கு எழுந்துள்ளது.
அதனால் அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தமது சேவையை மட்டுப்படுத்தி வருகின்றனர்.அதன் மூலம் நோயாளர்களை தமது தனியார் வைத்தியசாலை நோக்கி இழுத்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக அந்த தனியார் வைத்தியணாலையின் பிரதான மூளையாக செயற்படுபவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிரேஸ்ட மயக்க மருந்து வைத்திய நிபுணர்.
அவர் தனக்கு கீழான மருத்துவர்களை கொண்டு பரிபாலனம் செய்யும் சிகிச்சை கூடங்களில் பலவற்றை இவ்வாறு மட்டுப்படுத்தி வைத்துள்ளார்.
ஐந்து சத்திரசிகிச்சை கூடங்களையும் நான்கு அதி தீவிர சிகிச்சை அலகுகளையும் கொண்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்,அவை அனைத்துக்குமான பிரதானியாக குறித்த மயக்க மருந்து நிபுணர் திகழ்கிறார்.
அவற்றில் மயக்க மருந்து செலுத்துவதற்கு வைத்தியர்கள் போதுமான அளவு இல்லை என கூறி புற்றுநோய்க்கான அதி தீவிர சிகிச்சை பிரிவை சாதாரண விடுதி போன்று இயங்க செய்திருக்கிறார்.
புற்றுநோய்க்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட சத்திரசிகிச்சை கூடத்தை வாரத்தில் ஒரு நாள் மாத்திரமே இயங்க செய்திருக்கிறார், பிரதான சத்திரசிகிச்சை கூடம்,மகப்பேற்றுக்கான சத்திர சிகிச்சை கூடம்,விசேட சத்திரசிகிச்சைகளுக்காக அமைக்கப்பட்ட அதிநவீன சத்திர சிகிச்சை கூடம் என்பன இரவில் இயங்குவதில்லை.
அவற்றை இயக்குவதற்கு போதுமான மயக்கமருந்தேற்றும் மருத்துவர்கள் இல்லை என்று காரணம் சொல்லப்படுகிறது.
உண்மை காரணம் அதுவல்ல.நோயாளர்களின் காத்திருப்பு காலத்தை அதிகரிப்பதன் மூலம் அவர்களை துன்பத்திற்குள்ளாக்கி,அரச வைத்தியசாலைமீது வெறுப்பை தூண்டி,உயிர் பயத்தை ஏற்படுத்தி தமது தனியர் வைத்தியசாலைக்கு இழுப்பதுதான் பிரதான நோக்கமாகும்.
ஏனெனில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் மயக்க மருந்து வழங்கும் வைத்தியர்கள் தினமும் சாதாரண கடமையாக எட்டு மணித்தியாலங்களும் மேலதிக நேர கடமையாக நான்கு மணித்தியாலங்களும் வேலை செய்வதாக கணக்கு காண்பித்து வேதனம் பெற்று வருகின்றனர்.
ஒரு மயக்க மருந்து வழங்கும் வைத்தியர் ஒரு நாளில் இரவு கடமை செய்தால் இரண்டு நாட்கள் கடமைக்கு வரவேண்டியதில்லை என்ற விதியை அந்த மயக்க மருந்து நிபுணர் உருவாக்கி வைத்திருக்கிறார்.ஆனால் மூன்று நாளுக்குமான முழுமையான வேதனமும் மேலதிக நேர கொடுப்பனவும் அவர்களுக்கு வழங்கபடுகின்றது. இது போன்றதொரு ஊழல்தான் என் விடயத்திலும் நடந்திருக்கிறது.
அந்த தனியார் வைத்தியசாலைக்கு வருமானத்தை ஈட்டி கொடுப்பதில் எலும்பு முறிவு வைத்திய நிபுணர்கள் பெரும்பங்காற்றி வருகின்றனர். குறிப்பாக சொல்வதானால், அவர்கள் நோயாளர்களை ஏமாற்றி அந்த தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சத்திரசிகிச்சை செய்வதன் மூலம்தான் அங்குள்ள ஊழியர்களுக்கு வேதனம் வழங்கப்படுகிறது.
இதனால்தான் நோயாளர்களை அலைக்கழித்து,ஏமாற்றி முள்ளந்தண்டு சத்திர சிகிச்சையை எலும்பு முறிவு வைத்திய நிபுணரும் செய்ய முடியும் என்ற செய்தியை மறைமுகமாக சொல்லி, அவர்களை தனியார் வைத்தியசாலைக்கு இழுக்கும் வேலையை அந்த மயக்க மருந்து வைத்திய நிபுணர் செய்து வருகிறார் என்பதை நான் உணர்ந்தேன்.
ஏனெனில் இன்ன வைத்திய நிபுணருக்கு இன்ன நாளில்தான் சத்திரசிகிச்சை கூடம் சிகிச்சைக்காக ஒதுக்கப்படும் என்பதை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீர்மானிப்பது அந்த மயக்க மருந்து வைத்திய நிபுணர்தான்.
அதனால்தான் நரம்புமண்டல சிகிச்சை நடக்கும் அதே நாளை எலும்பு முறிவு சிகிச்சைக்கான நாளாகவும் அந்த மயக்க மருந்து நிபுணர் ஒதுக்கியுள்ளார்.அங்குள்ள பணிப்பாளர் என்பவர் அவரது பொம்மைதான்.
இந்த பிரளயங்களில் சிக்கி சின்னா பின்னபட்ட நான், இப்போது ஆயுர்வேத வைத்தியசாலையில் முடங்கி கிடக்கிறேன்.
கௌரவ சுகாதார அமைச்சரே! நீங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பயிற்சி மருத்துவராக இருந்தவராம் என்று அறிகிறோம்.இது உங்கள் கவனத்திற்கு.
சம்பவங்கள் தொடரும்….
யாராச்சும் அந்த கொஸ்பிட்டல மதனுட்ட இருந்து காப்பாத்துங்கப்பா….
அதேசமயம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரச்சனைகள் காணப்படுவதாகவும், அதனால் தன்னை அங்கு வந்து அதனை நிவர்த்திசெய்து தரும் படியும் சிலர் கோரியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், வைத்தியர் அர்ச்சுனா காணொளி ஒன்றில் தெரிவித்துள்ளமை மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.