இவ்வருடம் (2023) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஹஜ் முகவர் நிலையங்கள் ஊடாக ஹஜ் யாத்திரை மேற்கொண்ட யாத்திரிகர்கள் முகவர் நிலையங்களுக்கு எதிரான முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகள், கருத்துகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்பு அனுப்பி வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகள் தகுந்த ஆதாரங்களுடன் திணைக்களத்துக்கு எழுத்து மூலம் பதிவுத்தபாலில் அல்லது திணைக்களத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும் என திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட். ஏ.எம்.பைசல் ஊடகமொன்றிற்குத் தெரிவித்தார்.
ஏற்கனவே சில முறைப்பாடுகள் திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் கடந்த வருடங்களில் போன்று சுயாதீன விசாரணைக்குழுவொன்றின் மூலம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
ஹஜ் முகவர்களுக்கெதிரான முறைப்பாடுகள் நிரூபிக்கப்பட்டால் ஹஜ் அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்படுதல் உட்பட பல தண்டனைகள் விதிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.