இலங்கையில் அதிகரித்து வரும் வெப்ப அழுத்தம் காரணமாக, 2023ஆம் ஆண்டில் 1 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான முழுநேர வேலைவாய்ப்புகளுக்குச் சமமான வேலை நேர இழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தெரிவித்துள்ளது.
1985 முதல் 2014 வரையிலான காலப்பகுதியின் சராசரியுடன் ஒப்பிடுகையில், 2023ஆம் ஆண்டில் வெப்பநிலை அதிகரிப்பால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு மேலதிகமாக 6.5 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெப்ப அழுத்தத்தால் ஏற்பட்ட வேலை நேர இழப்பில் விவசாயத்துறை 48 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. சேவைத்துறை 22 சதவீதம், உற்பத்தித்துறை 13 சதவீதம், கட்டுமானத்துறை 11 சதவீதம், போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை 6 சதவீதம் என வேலை நேர இழப்புகள் பதிவாகியுள்ளன.
மேலும், இழந்த வேலை நேரங்களில் 35 சதவீதம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
1960களுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் சராசரி வெப்பநிலை சுமார் ஒரு பாகை செல்சியஸ் அதிகரித்துள்ளதாகவும், மழைவீழ்ச்சி முறைகள் கணிக்க முடியாத வகையில் மாறிவருவதாகவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால், 2040ஆம் ஆண்டளவில் ஆண்டுதோறும் 1 இலட்சத்து 45 ஆயிரம் முதல் 2 இலட்சத்து 21 ஆயிரம் வரையிலான முழுநேர வேலைவாய்ப்புகளுக்குச் சமமான இழப்பு ஏற்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 2060ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 1 இலட்சத்து 58 ஆயிரம் முதல் 3 இலட்சத்து 49 ஆயிரம் வரை அதிகரிக்கக்கூடும். அதிக பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் கொண்ட சூழ்நிலையில், இலங்கையின் வருடாந்த பொருளாதார உற்பத்தி 15.2 சதவீதம் வரை குறையக்கூடும் என்றும் அறிக்கை எச்சரித்துள்ளது.
விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் பணியாற்றுவோர் அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் வேலை செய்வதால் அதிக ஆபத்தை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள அமைப்பு, வேலை மற்றும் ஓய்வு நேரங்களை ஒழுங்குபடுத்துதல், போதிய குடிநீர் வசதிகள், காற்றோட்டம் மற்றும் குளிரூட்டல் வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளது.
அதிகரித்து வரும் வெப்பநிலையின் தாக்கத்திலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், பொருளாதார இழப்புகளைக் குறைக்கவும் காலநிலை மாற்றத்திற்கேற்ற தழுவல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
https://www.ilo.org/sites/default/files/2026-10/SriLanka_Factsheet.pdf








