மேற்கு ஆபிரிக்காவின் நைஜர் நாட்டின் ஜனாதிபதி கைது செய்யப்பட்டுள்ளமைக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்டரெஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.அத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் ஜனநாயகத்துக்கு இடையூறு விளைவிக்கும் என்பதுடன் இது போன்ற ஜனாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை இராணுவத்தினர் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும நைஜர் ஜனாதிபதி முகமட் பஸூமை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்
எனவும் அவர் தெரிவித்தார்.நைஜரின் ஜனாதிபதி மொஹமட் பஸூமை அதிகாரத்தில் இருந்து அகற்றியதாக அந்த நாட்டு இராணுவத்தினர் அறிவித்தனர்.
கடந்த புதன்கிழமை ஜனாதிபதியை, அவரது மெய்ப்பாதுகாவலர்கள் தடுத்து வைத்துள்ளதாக தகவல் வெளியான பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.தேசிய தொலைக்காட்சியில்
ஒளிபரப்பப்பட்ட ஒரு அறிக்கையில், கேணல் மேஜர் அமடூ அப்த்ரமானே, “பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் படைகள் உங்களுக்கு நன்கு தெரிந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளன” என்று
கூறினார்.
நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாகவும் அவர் கூறினார். நாட்டின் அனைத்து நிறுவனங்களும் இடைநிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அப்த்ரமனே இந்த சதிப்புரட்சி அறிக்கையைப் படிக்கும் போது, சீருடை அணிந்த மற்ற ஒன்பது அதிகாரிகள் அவரின் பின்னால் வரிசையாக நின்றனர்.
நாட்டைப் பாதுகாப்பதற்கான தேசிய கவுன்சில் என்று தங்களை குறிப்பிட்ட இந்த குழு, எந்தவொரு வெளிநாட்டு தலையீட்டிற்கும் எதிராக எச்சரித்தது.அப்த்ரமானே அறிவிக்கும் போது ஜனாதிபதி எங்கே இருந்தார் அல்லது அவர் ராஜினாமா செய்தாரா என்பது தெளிவாகத்தெரியவில்லை.
நியூசிலாந்தில் செய்தியாளர் களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அன்ரனி பிளிங்கன், “நைஜரின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக அமெரிக்கா உறுதியுடன் ஆத ரிக்கிறது என்பதை நான் இன்று காலை ஜனாதிபதி பஸூமுடன் பேசினேன். அவரை உடனடியாக விடுவிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.
2020 முதல் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா பிராந்தியத்தில் நடந்த ஏழாவது இராணுவச் சதி இதுவாகும்.நிலத்தால் சூழப்பட்ட முன்னாள் பிரெஞ்சு காலனியான நைஜர், ஆயுதமேந்திய குழுக்களை எதிர்த்துப் போராட உதவும் மேற்கத்திய சக்திகளுக்கு ஒரு முக்கிய கூட்டாளியாகும், மேலும் துணை-சஹாரா ஆபிரிக்காவில் இருந்து ஒழுங்கற்ற குடியேற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் ஐரோப்பிய
ஒன்றியத்தின் முக்கிய பங்காளியாகவும் உள்ளது.
நைஜரில் அமெரிக்காவின் இரண்டு ட்ரோன் தளங்கள் உள்ளன. அங்கு சுமார் 800 அமெரிக்க துருப்புக்களும் நிலைகொண்டுள்ளனர். அவர்களில் சிலர் நைஜீரிய இராணுவத்திற்கு பயிற்சி அளித்து வரும் சிறப்புப்படைகள்.அந்த குறிப்பிட்ட பிராந்தி யத்தில் எஞ்சியிருக்கும் கடைசி அமெரிக்க கூட்டாளி நைஜராகும். அண்டை நாடான மாலி, புர்கினா பாசோவில் உள்ள அரசாங்கங்கள் இராணுவ சதிப்புரட்சிகளில் கவிழ்க்கப்பட்டன.
இந்த இரண்டு நாடுகளிலும் அங்கிருந்த பிரெஞ்சு வீரர்களை வெளியேற்றிவிட்டு, ரஷ்யாவின்
ஆதரவுப் படைகளின் பாதுகாப்பை பெற்றுள்ளன.நைஜரிலும் இதே நிலைமையே ஏற்படலாம் என கருதப்படுகிறது.