ஆரையம்பதி திருநீற்றுக்கேணி குளம் மற்றும் வாய்க்கால் பகுதிகளில் பாரியளவிலான சிரமதானப்பணி 27-07-2023 அன்று பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டது.
USAid மற்றும் Global Communities நிறுவனங்களின் அனுசரணையுடன் LIFT தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் இப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாரிய சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
ஆரையம்பதி திருநீற்றுக்கேணி குளம் அதனோடு இணைந்த வாய்க்கால் வழியாக மழை காலங்களில் வெள்ள நீர் வழிந்தோடி பாலமுனை பகுதியில் கடலில் கலக்கப்படுவது வழமை. இருந்தாலும் குளம் மற்றும் வாய்க்கால் பகுதிகளில் வளர்ந்திருந்த புதர்கள் மற்றும் சேர்ந்திருந்த குப்பைகூளங்கள் மண் குவியல்கள் எனப் பல்வேறு காரணங்களால் இதனுடான நீரோட்டம் தடைப்படுவதனால் ஒவ்வொரு வருடமும் இப்பகுதி வெள்ளத்தில் மூழ்கி பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த அடிப்படையில் மட்டக்களப்பில் பல்வேறு மனிதாபிமான பணிகளை முன்னெடுத்து வரும் LIFT நிறுவனத்தினால் இதற்கு நிரந்தர தீர்வாக குளம் மற்றும் வாய்க்கால் பகுதிகளை ஆய்வு செய்து அதற்கான பொருத்தமான கட்டுமானங்களை செய்வதற்கான நிதி மற்றும் வரைபடங்கள் போன்றவற்றை தயாரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக பொதுமக்களின் ஒத்துழைப்புடன் குளம் மற்றும் வாய்க்கால் பகுதிகளில் சிரமதானம் மூலமாக துப்பரவு செய்யும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.
LIFT நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் தலைமையில் எட்டு குழுக்களாக மக்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் 35 மக்கள் உள்வாங்கப்பட்டு சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தூரமான இந்தவாய்க்கால் பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டன.
இத்துப்பரவு பணியில் ஆரையம்பதி பிரதேச செயலகம் மற்றும் ஆரையம்பதி பிரதேச சபையினரும் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்ததோடு உழவு இயந்திரம் ஆளணி போன்ற பங்களிப்பையும் செய்திருந்தனர்.
தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் இணைந்து வாழும் இப்பகுதியில் இரண்டு இன மக்களும் இணைத்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.