ஈக்குவடாரில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய தவளை இனத்திற்குப் பிரபல ஹொலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
த டெலிகிராஃப் இதழின் கூற்றுப்படி, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தவளைக்கு ‘ஃபிலோனாஸ்டஸ் டிகாப்ரியோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ குய்டோ பல்கலைக்கழகம், ஈக்குவடாரின் தேசிய பல்லுயிர் நிறுவனம் மற்றும் ஈக்குவடார் கத்தோலிக்க பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஏழு புதிய தவளை இனங்களைக் கண்டறிந்துள்ளனர். அதில் ஒன்றுக்கு தான் தற்போது ஹொலிவுட் நடிகரின் பெயர் சூட்டப்பட்டது
புதிதாகக் கண்டறியப்பட்ட இந்த தவளை இனம் ஈக்குவடாரின் எல் ஓரோ மாகாணத்தில் மேற்கு பகுதியில் உள்ள மலைப்பாங்கான வனப்பகுதியில் காணப்படுகின்றன.

இவை கருமையான புள்ளிகளால் மூடப்பட்ட பழுப்பு நிற தோல் கொண்டவை. நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை உள்ளவை . இந்தத் தவளை கடல் மட்டத்திலிருந்து 1,300-1,700 மீற்றர் உயரத்தில் வாழ்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
டைட்டானிக் படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்ற ஒஸ்கார் நாயகனும் ஹொலிவுட்டின் முன்னணி நடிகரான லியோனார்டோ டிகாப்ரியோ, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபாடு கொண்டவர்.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1998 ஆம் ஆண்டு ‘லியோனார்டோ டிகாப்ரியோ அறக்கட்டளையை நிறுவினார்.
ஈக்குவடாரின் யசுனி தேசிய பூங்காவில் எண்ணெய் தோண்டும் திட்டத்தை நிறுத்த இவரது அறக்கட்டளை குரல் கொடுத்தது. எனவே அவரது முயற்சிகளை கௌரவிக்கும் வகையில் தவளைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.